• Mon. May 20th, 2024

நிலஅபகரிப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் கைது

சேலத்தில், நில அபகரிப்பு புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (70). ரியல் எஸ்டேட் அதிபர். அதிமுகவில், சேலம் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராக உள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் துர்கா சங்கர். இவர் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், கடந்த 1993ம் ஆண்டு, ஒரு ஏக்கர் நான்கு சென்ட் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கினார். இவர், சொந்த மாநிலத்தில் இருந்து வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து சேலத்தில் விற்பனை செய்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துர்கா சங்கர், ஏற்காட்டில் தனக்குச் சொந்தமான நிலத்தை விற்றுக் கொடுக்கும்படி சுகுமாரிடம் கேட்டுள்ளார். அவரும் விற்றுக் கொடுப்பதாக கூறியதை அடுத்து, நிலத்தின் ஆவண நகல்களை வழங்கியுள்ளார். ஆனால் சுகுமாரோ, போலி ஆவணங்கள் தயார் செய்து, துர்கா சங்கர் நிலத்தை தனது பெயருக்கு கடந்த 2014ம் ஆண்டு மாற்றிக் கொண்டிருக்கிறார்.

தன்னுடைய நிலத்தை கொடுத்து விடுமாறு துர்கா சங்கர், அடிக்கடி சுகுமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு சுகுமார் மறுத்துள்ளார். இதையடுத்து துர்கா சங்கர், சேலம் மாநகர காவல்துறை ஆணையரிடம் சுகுமார் மீது நில அபகரிப்பு புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தீவிர விசாரணையில் இறங்கினர். இதையடுத்து சுகுமாரை மார்ச் 21ம் தேதி, நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் செல்வராஜ், ஆய்வாளர் பழனியம்மாள் மற்றும் காவலர்கள் கைது செய்தனர். அவரிடம் நிலம் வாங்கிய 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்பேரில் சுகுமார், ஆத்தூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *