• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மத்திய அரசு விருது: முதல்வர் வாழ்த்து

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசின், வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கேரள மாநிலம், கொச்சியில் 15-வது இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. இதில் மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம் என்ற விருது வழங்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சென்னை பஸ் ஆப் என்ற செயலியை திறம்பட செயல்படுத்தியதற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற துறை இணை மந்திரி கவுசல் கிஷோர் ஆகியோர் வழங்கினர். இதைத்தொடர்ந்து முதல்-வர் மு.க.ஸ்டாலினை தலைமைச்செயலகத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சந்தித்து விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது தலைமை செயலாளர் இறையன்பு, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் ஆகியோர் உடனிருந்தனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.