• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ்,ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு!

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ்,ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் உரிமையியல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் துணை பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை நீக்கி அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என உத்தரவிடக் கோரி சசிகலா,டிடிவி ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில்,கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னை பொதுச்செயலாளராக அறிவித்த தீர்மானம் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோரை கட்டுப்படுத்தும் என உத்தரவிட வேண்டும் என்றும்,மேலும்,அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து,சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.அதன்பின்னர்,இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது,அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா உரிமை கோர முடியாது எனவும்,அதிமுக கட்சியும்,சின்னமும் தங்களிடம் இருப்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

அதன்படி,இருதரப்பு வாதங்களும் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,இன்று இந்த வழக்கில் சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.இதனிடையே,அமமுக கட்சியை தொடங்கியதால் டிடிவி தினகரன் வழக்கில் இருந்து விலகிய நிலையில் சசிகலா மட்டுமே வழக்கை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.