• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அனைத்து சாதியினர் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய சிக்கல்

கோவில்களில் சாமி சிலையை தொடுவது ஆகமத்துக்கு எதிரானது என அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிராக புதிய வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து சாதியினர் அர்ச்சகர்களாகலாம் என்கிற நிலைமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாதி ஆதிக்கத்துக்கு எதிராக தந்தை பெரியார் முன்வைத்த கோரிக்கை அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது. தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, இக்கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார். ஆனால் நீதிமன்ற வழக்குகளால் இத்திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. மிகப் பெரும் சட்ட போராட்டங்களுக்கு பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அண்மையில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமித்து பணி ஆணை வழங்கியது.

ஆனாலும் சாதி ஆதிக்கவாதிகள், மத பழமைவாதிகள் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். தற்போது இந்துக்களில் ஒரு பிரிவினர்தான் சாமி சிலைகளைத் தொட்டு வழிபாடு நடத்த முடியும் என்பது ஆகமம். ஆகவே அர்ச்சகராகிவிட்ட அனைத்து சாதியினருமே சாமி சிலைகளைத் தொட்டு பூஜை செய்ய முடியாது என்கிற வாதத்தை அவர்கள் முன்வைக்கின்றனர். தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் ரங்கநாதன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த ஆபத்தை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் அனைத்து சாதியினர் அர்ச்சகராவதற்கு எதிராக தொடரப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் விவரங்களையும் அவர் பட்டியலிட்டுள்ளார். மொத்தம் 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆகையால் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதீன மடங்களும் இந்த வழக்குகளில் தங்களையும் இணைத்துக் கொண்டு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பது அவரது வேண்டுகோள்.அத்துடன் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மூத்த வழக்கறிஞர்களை கொண்டு ஒருதரப்பினர் அரசியல் சாசனத்துக்கும் மேலானவர்கள் என்கிற அடிப்படைவாதத்தை தகர்த்து சமூக நீதி கோட்பாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்றும் ரங்கநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.