• Tue. Apr 30th, 2024

நான் தான் மதுரை ஆதினம் – நித்யானந்தா மீண்டும் சர்ச்சை!…

By

Aug 18, 2021

மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தன்னை நித்யானந்தா அறிவித்துள்ள நிலையில், அவருக்கும் மடத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என மடத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292 வது பீடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த அருணகிரி நாதர் கடந்த ஆகஸ்ட் 13 அன்று இரவு உடல்நல குறைவால் காலமானார். அவருடைய உடல் நல்லடக்கம் செய்வதற்கான சடங்குகளை தருமபுரம், திருவாவடுதுறை, கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மடத்தின் பீடாதிபதிகள் முன்னின்று நடத்தி வைத்தனர்.


அதனை தொடர்ந்து, அருணகிரி நாதரால் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்த, திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி 293 வது பீடாதிபதியாக பொறுப்பேற்று மடத்தின் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக தான் பொறுப்பேற்றுக் கொண்டதாக நித்யானந்தா அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையும், புகைப்படங்களும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த 292 வது பீடாதிபதி அருணகிரிநாதருக்கு தேவையான சாஸ்திர, சம்பிரதாயங்களை தான் கைலாசாவில் இருந்து செய்து முடித்து விட்டதாகவும், ஆன்மீகம் மற்றும் மடத்தின் தர்ம ஆசாரங்களின் படி மடத்தின் அதிகாரப்பூர்வ 293 வது பீடாதிபதியாக பொறுப்பேற்று கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 2012 ஆம் ஆண்டு நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், தற்போது அவர் ஆதீன மடத்தின் பீடாதிபதியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டதாக சில புகைப்படங்களையும் பகிர்ந்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, அருணகிரிநாதர் மறைவின் போது, நித்யானந்தா வெளியிட்ட சர்ச்சை அறிக்கை குறித்து மடத்தின் 293 வது ஆதீனம் மற்றும் பிற மடாதிபதிகளிடம் கேட்ட போது, “நித்யானந்தா விவகாரம் குறித்து பேச எதுவுமில்லை” என்று பதிலளித்தனர்.

மதுரை ஆதீன மடம் மிக தொன்மையான மரபு கொண்டது. இது நித்தியானந்தாவின் முகநூல் பதிவிற்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பாது என நித்தியானந்தாவின் தற்போதைய அறிக்கை குறித்து மடத்தின் நிலைப்பாட்டை வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *