• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பஞ்சாப் முதல்வரின் உறவினர் திடீர் கைது…பின்னணி தகவல்கள்

பஞ்சாப்பில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹானி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. பிப்ரவரி 14 -ம் தேதி பஞ்சாப் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் 117 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறையும் ஆட்சியை தக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை தட்டி பறிக்க வேண்டும் என்று பாஜக துடியாய் இருக்கிறது.ஒருபக்கம் ஆம் ஆத்மியும், சிரோமணி அகாலிதளமும் களத்தில் இருக்கிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் கட்சியும் பாஜக பக்கம் நிற்கிறது. இந்த கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் ஏற்கனவே பஞ்சாப் சட்டசபை தேர்தலுக்கான பட்டியலை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபேந்திர சிங் ஹானி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத மணல் குவாரி விவகாரத்தில் பூபேந்திர சிங் ஹானியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. பூபேந்திர சிங் ஹானி பஞ்சாபில் சட்டவிரோதமாக மணல் குவாரிகளை நடத்தி வந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த மாதம் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ரூ.8 கோடி கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக நேற்று மாலை பூபேந்திர சிங் ஹானியிடம் நீண்ட நேரம் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) விதிகளின் கீழ் ஹானி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று சிபிஐ நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உள்ளனர். பஞ்சாப் சட்டசபை தேர்தல் இன்னும் 10 நாட்களில் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் கைது செய்யப்பட்டது
பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அந்த மாநில தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. பாஜக இந்த பாயிண்டை மையமாக வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட தயாராகி வருகிறது.