• Tue. Apr 30th, 2024

வரலாறு தெரியாத மோடியே? வட நாடு மட்டும்தான் இந்தியாவா?

இந்த உலகிலேயே முக்கியமான மொழி தமிழ். சம்ஸ்கிருதத்தைவிட உயர்ந்தது தமிழ்மொழி. அதை நான் நேசிக்கிறேன்’ என்று ஒரு நாள் உருகுகிறார். அடுத்தநாளே, தமிழகத்தின் கீழடி தொல்பொருள் ஆய்வுகளை மூட்டை கட்டும் மத்திய அரசு அதிகாரிகளை வேடிக்கை பார்க்கிறார்.

சிலவாரங்கள் கழித்து,

`தொட்டன தூரும் மணற்கானி மாதர்க்குக்

கட்டன தூரும் எரிவ’ –

என்று கடித்துக் குதறியாவது தமிழில் திருக்குறளைச் சொல்லி கிச்சுக்கிச்சு மூட்டுகிறார்.

ஆனால், தமிழ்நாட்டிலிருந்து கோரிக்கைகளுக்காகச் சந்திக்கவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கக்கூட மறுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஏன் என்றுகூடக் கேட்க மறுக்கிறார்.

இதோ… இந்த ஜனவரி 12-ம் தேதிகூட, சென்னை அரும்பாக்கத்தில் அமைந்திருக்கும் செம்மொழித் தமிழாய்வு மையக் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசியவர், `தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தமிழ் பெருமை பேசினார்.
ஆனால், அடுத்த சில நாள்களிலேயே தமிழக ஊர்தி செல்லும் வழியையே அடைத்துவிட்டார். விடுதலைப் போராட்ட பெருமை பேசும் தமிழகத்தின் குடியரசு தின ஊர்திக்கு அனுமதி மறுத்திருக்கும் மத்திய அரசு அதிகாரிகளின் அடாவடியைக் கண்டுகொள்ளவே இல்லை.

மோடியின் இந்தத் தமிழ்த் தந்திர மோசடி நாடகங்களை இன்னமும்கூட புரிந்துகொள்ளாமல் இருக்கும் தமிழர்களை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது.

ஆம்… ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்தியை மட்டுமல்ல. தமிழர்களாகிய நம் அனைவரின் மரியாதையையும்தான். தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது எந்தக் கட்சியாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இது தமிழகத்தின் அரசு. அதிலும், தேச ஒற்றுமையைப் பறைசாற்றக்கூடிய ஓர் ஊர்தியைத்தான் மாநில அரசு அனுப்ப முயற்சி செய்தது. அதைக்கூட ஏற்றுக்கொள்ள இயலவில்லை, இந்தியா என்பது ஒன்றியமாக இருந்துவிடக் கூடாது என்று பிரித்தாளும் சூழ்ச்சியோடு நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வால்.
இந்தியா என்பது 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களின் கூட்டணியே. இந்த மாநிலங்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் அரசுதான் ஒன்றிய அரசு. ஆனால், நிஜத்தில் அப்படியிருப்பதில்லை என்பதைத்தான் அடிக்கடி மாநிலங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது, ஒன்றிய அரசு. இது ஏதோ இந்த மோடியின் ஆட்சிக் காலத்தில் மட்டும் நடக்கிறது என்று நினைத்துவிட வேண்டாம். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, ஒன்றியத்தை ஆளும் அரசுகளால் (வி.பி.சிங் ஆட்சி போல சில விதிவிலக்குகள் தவிர) தொடர்ந்து அரங்கேற்றப்பட்டுவரும் கேவலமான அரசியல் நாடகமே!இந்தியா என்றால், வடநாடு மட்டுமே இந்தியா என்கிற கேவலத்திலும் கேவலமான மனப்பான்மை தொன்றுதொட்டு தொடர்வதன் விளைவே… இந்த அநாகரிக அரசியலுக்கு அடிப்படை.
தமிழக அரசின் குடியரசு தின ஊர்தியில் இடம்பெறவிருந்த… சிவகங்கை ராணி வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முண்டாசுக் கவி பாரதியார்… இவர்களையெல்லாம் யாருக்கும் தெரியாது. அதனால், தமிழக அரசின் ஊர்தியை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் என்று காரணம் சொல்லியிருக்கிறார்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் சிலர்.
அட மண்டூகங்களே… இன்றைக்கு இந்தியக் குடியரசு தினம் என்பதைப் பெருமையாகக் கொண்டாடுவதற்குக் காரணமாக இருக்கும் பல்வேறு முத்தான ஆளுமைகளில் முக்கியமான மூன்று ஆளுமைகள்தான் அவர்கள் என்று உங்களுக்கெல்லாம் யார்தான் புரிய வைப்பதோ. ஆம், இந்திய விடுதலைக்காக மூட்டப்பட்ட வேள்வித்தீயில் முகிழ்ந்து எழுந்த மூன்று முத்துக்களடா அவர்கள்.வ.உ.சிதம்பரனார்
நம்மையெல்லாம் அடிமைகளாக்கி, ஆட்சியை தமதாக்கிக் கொண்ட அந்நிய அயோக்கியர்களுக்கு, அந்தக் காலத்தில் அடிவருடிகளாகவும் சேவகர்களாகவும் நின்று கவரி வீசிய வடநாட்டு அடிமைகளுக்கு, தென்னாட்டின் வீரமும்… தியாகமும் எங்கிருந்து தெரியப்போகிறது! உண்மையில், ஆங்கிலேய அராஜக ஆட்சிக்கு எதிராக முதன்முதலில் ஓங்கி ஒலித்த குரல், தமிழ்நாட்டிலிருந்துதான் ஒலித்தது. தென்னகத்தில் பற்றவைக்கப்பட்ட தீதான்… இந்தியா முழுக்க பற்றியெரிய ஆரம்பித்தது.
மண்ணெல்லாம் வீரம் பேசி, மலரெல்லாம் தமிழ் நாறி, பெண்ணெல்லாம் புலியாகச் சீறி… இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து நிற்பவர், சிவகங்கைச் சீமையின் ராணி வேலுநாச்சியார்! அவரின் உருவ வரைபடம், வடநாட்டைச் சேர்ந்த ஜான்சி ராணியைப் போல் இருக்கிறது என்கிற காரணத்தையும் சொல்லி, வேலு நாச்சியார் இடம்பெற்ற தமிழகத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருக்கிறது ஒன்றிய அரசு.இந்திய விடுதலைப் போராட்டம் என்பது கங்கை மற்றும் சிந்துச் சமவெளி நிலப்பகுதிகளிலுள்ள வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் மட்டுமே நடைபெற்றது. இதைக் கடந்த மற்ற நிலப்பரப்பில் விடுதலை வேள்வி ஏற்படவில்லை’ என்பதுதான் காலகாலமாக வடஇந்தியர்களின் பொதுப்புத்தியாக இருக்கிறது.
ஜான்சி ராணி, தன்னுடைய வளர்ப்பு மகனின் வாரிசு உரிமைக்காகத்தான் ஆங்கிலேயரிடம் போராடினார். ஆனால், இந்த ஜான்சி ராணிக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்பே, தங்களின் சொந்த மண்ணின் சுதந்திர உரிமைக்காக வெள்ளையர்கள் மீது போர் தொடுத்தவர் எங்கள் வேலு நாச்சியார். சிவகங்கை ராஜ்யத்தை நயவஞ்சகமாக கைப்பற்றிய வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போர் வியூகங்கள் அமைத்து, எதிரிகளின் ஆயுதபலத்தை முறியடிக்க முதன்முதலில் கெரில்லா தாக்குதலை நடத்த திட்டமிட்டவர் வேலு நாச்சியார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான தன் தோழி குயிலியை மனிதவெடிகுண்டாக மாற்றி வெள்ளையர்களைக் கதிகலங்க அடித்தவர் வேலு நாச்சியார். சரியாகத் திட்டமிட்டு, உலகின் முதல் பெண் மனித வெடிகுண்டாக மாறிய குயிலி, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கை அழித்தொழித்துக் கதறவிட்டார்.

மரபுவழி போர்க்களத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து சிவகங்கை படைப் பிரிவுக்குத் தானே தலைமையேற்ற வேலு நாச்சியார், கடும்போரில் வெள்ளையர்களின் படைத் தளபதி கர்னல் பால்ஜோர் தலைமையிலான கும்பினிப் படையை தோல்வி அடைய செய்து, கர்னல் பால்ஜோரை தன்னிடம் சரணடைய வைத்தார். 1780-ம் ஆண்டு சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டப்பட்டார் வேலு நாச்சியார். பின்னர், கர்னல் பால்ஜோருக்கு பொதுமன்னிப்பு வழங்கி அனுப்பி வைத்தார் என்பது வரலாறு.இந்திய அரசு அதிகாரிகளுக்கு இந்த வரலாறெல்லாம் தெரிவதும் இல்லை… தெரிந்துகொள்ள விரும்புவதும் இல்லை. அப்படித்தான், இவர்களுக்கு கப்பலோட்டய தமிழனையும் தெரிந்துகொள்ள நேரமில்லை. ஆனால், கப்பலோட்டிய தமிழனின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாத வடஇந்திய மமதைக்காரர்களின் மானத்தைக் கப்பலேற்ற வேண்டியது, ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது!வெள்ளை ஏகாதிபத்தியத்தைப் பொருளாதாரரீதியில் நிலைகுலைய வைப்பதற்காக உலக அளவில் யாருமே சிந்திக்காத கோணத்தில் தூத்துக்குடியில் உட்கார்ந்துகொண்டு அந்தக் காலத்திலேயே சிந்தித்தவர், வ.உ.சி. வெள்ளையர்களுக்குப் பொருளாதார முடையை உருவாக்குவதற்காக, கட்டிய மனைவியின் தாலியை விற்று, இந்தியா – இலங்கை இடையே வங்கக்கடலில் சுதேசிக் கப்பல் ஓட்டினார். இது ஆங்கிலேயர்களை கதிகலங்க அடிக்கவே, இதை மாபெரும் குற்றமாக அறிவித்து அவரைக் கைது செய்து வாழ்நாள் தண்டனை விதித்து, சிறைக்குள் அடைத்தனர். சிறைக் கொட்டடியில் செக்கிழுப்பதற்காக கால்நடைகள் போல வ.உ.சி-யைப் பயன்படுத்தியது, வெள்ளையர்களின் அரசு. இந்தக் கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு, வாழ்நாளையே இந்தியா விடுதலைக்காக அர்ப்பணித்தார் வ.உ.சி.
அவர் இழுத்த செக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தின் ஓர் சிறப்பான ஆயுதம். அது, நினைவுச் சின்னமாக அருங்காட்சியகத்தில் மௌனசாட்சியாக இன்றும் வீற்றிருப்பது, தமிழர்களின் வீரத்தை… தியாகத்தை… குறைவாக எடைபோடும் குஜராத் வியாபாரிகள் அறியவில்லையே என்று நினைக்கும்போது,

`நெஞ்சு பொறுக்குதில்லையே…

இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்’

என்று அக்ரஹாரத்தில் பிறந்த அதிசய மனிதன் முண்டாசுக் கவிஞனின் வார்த்தைகள்தான் வந்துமுட்டுகின்றன.

கொடுமை என்னவென்றால், அந்த முறுக்கு மீசைப் புலவனைக்கூட இந்த வடநாட்டு அதிகாரிகளுக்குத் தெரியாதாம். எட்டயபுரம் கரிசல்காட்டில், வானம் பார்த்த பூமியில், தமிழர்களின் மானம் காக்க பாடியவன் விடுதலை கவிஞன் பாரதி. இந்திய விடுதலைக்கு முன்பாகவே, தவமாய் தவமிருந்து…

`வந்தே மாதரம் என்போம்

எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்’

என்கிற மந்திரச் சொற்களால் விடுதலை உணர்ச்சியை உசுப்பியவன் எங்கள் சுப்பிரமணிய பாரதி.

`வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்

அடி மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்’

என்று கை வலிக்க வலிக்க எழுதியவன்…. நா தழும்பேறப் பேசியவன். அவன் பாடாத, எழுதாத பொருள் இல்லை. அந்தப் பாரதியை அறியாதவன், எப்படி இந்தியனாக இருக்க முடியும்?

வெற்றுக்கதைகளையும், நம்பமுடியாத புராணங்களையும் சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் வடஇந்தியர்களுக்கு, உண்மையான வரலாறு எங்கே உறைக்கப்போகிறது.

வடக்கே சென்றால், `இந்தி தெரியாதா… பிறகெப்படி நீ இந்தியன்?’ என்கிற கேலிப்பேச்சுகள் இன்றும்கூட தென்னகத்தவர்களை நோக்கி வீசப்படுவது உண்டு. ஆனால், இந்திய சுதந்திரத்துக்காக முதல் குரல் கொடுத்தவர்கள்… வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்கள் என்று மிகப்பெரும் பட்டியலே தென்னகத்தில் இருந்தும்… அவர்களையெல்லாம் தெரியாது என்று சொல்லும் வடஇந்தியர்கள், எப்படி இந்தியன்களாக இருக்க முடியும்?

பாடப் புத்தகங்களுக்கு வெளியேதான் உண்மையான வரலாறு நிறைந்திருக்கிறது. எழுதப்படாத காரணத்தாலேயே அவையெல்லாம் பொய்யாகிவிடாது என்பதை, இப்போதேனும் ஒன்றிய அரசு உணர்ந்துகொள்ள வேண்டும்.விருப்பு வெறுப்புகளற்றவர்களாகத்தான் இந்திய தேசியத்தின் ஆட்சியாளர்களும்… அதிகாரிகளும் இருக்க வேண்டும். அதுதான், சுதந்திர இந்தியா என்று சொல்வதற்கு அர்த்தத்தைச் சேர்க்கும். சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகியவைதான் ஒன்றுபட்ட இந்தியாவை உலகுக்கு எடுத்துச் சொல்லும் முக்கியமான தினங்கள். இந்திய இறையாண்மையை ஏற்றுக்கொண்டிருக்கின்ற ஒவ்வொரு மாநிலமும் தனித்தன்மை கொண்டது. அந்தத் தனித்தன்மையை அப்படி அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், இந்திய ஒற்றுமையை மேலும் மேலும் வலுப்பெறச் செய்யும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே, மத்தியில் ஆண்டவர்களால் இந்த உண்மையை ஜீரணித்துக் கொள்ள முடியாமல்தான் இருக்கிறது; இன்று வரை. ஆம், குறுகிய அரசியல் லாபத்துக்காக, மாநிலங்களை நசுக்குவதுதான் வரலாறாகவே இருக்கிறது.
மாநிலங்களின் சுயாட்சி உரிமைக்கு ஆபத்து ஏற்பாட்டால், அது இந்திய தேசத்தின் ஒற்றுமைக்கே ஆபத்து என்பதை இன்னமும்கூட மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மாநிலங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, நசுக்கப்பட்டுத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட காரணங்களால்தான், தேசிய கட்சிகளால் நிலைத்து நிற்க முடியவில்லை, மாநில அரசியலில்.
ம்… மிகமிக சாதாரணமான ஒரு விஷயம், குடியரசு தின அலங்கார ஊர்தி. இந்த விஷயத்தில்கூட சம்பந்தப்பட்ட மாநில அரசுகள்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற அளவுக்குச் சுதந்திரம் தரப்படவில்லை. என்ன அலங்கார ஊர்தி இடம்பெற வேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். அதுதான் மாநில சுயாட்சி… அதுதான் இந்திய கூட்டாட்சி. இல்லையென்றால், என்னை ஏற்கமறுக்கும், அங்கீகரிக்க மறுக்கும் இந்திய அடையாளங்களைத் தவிர்ப்பேன்' என்று ஒவ்வொரு மாநிலமும் முடிவெடுத்தால், உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்கிற பெருமைமிகு அடையாளம்... நூற்றாண்டுக் குடியரசு தினம் கொண்டாடும்போது இல்லாமலே போய்விடும் என்பதைக் கவலையோடு பதிவுசெய்ய விரும்புகின்றேன். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்த விரும்புகிறேன்... இந்தியா விடுதலை அடைந்த சூழலில், இந்தியர்களை நேர்காணல் செய்வதற்காக ஆங்கிலப் பத்திரிகையாளர் ஒருவர் மாநிலம் மாநிலமாகச் சென்றார். இங்கிலாந்து திரும்பிய அவர், அப்போது ஓர் உண்மையை உரக்கச் சொன்னார். ``நான் இந்தியாவுக்குச் சென்றேன். ஆனால், இந்தியர் என்று யாரையும் நான் காணவில்லை'' என்று சொல்லி எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியவர், அதற்கான காரணத்தையும் சொன்னார்.இந்தியாவின் வடபாகத்திலிருக்கும் காஷ்மீர் சென்ற நான், எதிர்ப்பட்டவரிடம்நீ யார்?’ என்று கேட்டேன். காஷ்மீரி' என்றார்.உன் தாய்மொழி என்ன?’வென்று கேட்டேன். காஷ்மீரி மொழி' என்றார். தெற்கே சென்னை மாகாணத்துக்குச் சென்றுநீ யார்?’ என்று கேட்டபோது, என் நாடு தமிழ் நாடு. என் தாய்மொழி, தமிழ் மொழி' என்று சொன்னார். வடகிழக்கே சென்ற என்னிடம்,என் மாநிலம் மணிப்பூர். என் தாய்மொழி மணிப்பூரி’ என்றார். மேற்கே கோவா சென்றபோது, நான் கோவா பகுதிக்காரன். என் தாய்மொழி கொங்கணி' என்று பதில் கிடைத்தது. இப்படியாகப் பஞ்சாப், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா என்று சென்ற இடங்களில் எல்லாம் அவரவர் மாநிலம், அவரவர் மொழியைத்தான் பதிவு செய்தார்கள்.நான் இந்தியன்’ என்று ஒருவரும் சொல்லவில்லை.”
அவர் அன்றைக்குச் சொன்ன இந்தக் காரணம், என்றென்றைக்கும் மாறப்போவதில்லை. இந்தியனாக இருப்பதற்காக, சொந்த அடையாளங்களை ஒருபோதும் அடகு வைக்க முடியாது.
என்னவோ, பாரத மாதாவுக்கு இவர்கள் மட்டுமே புத்திரர்கள் என்று பட்டயம் பெற்றதுபோல, எப்போதுமே வெறியூட்டும் வகையிலும் வெறுப்பூட்டும் வகையிலும் பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டுமிருக்கும் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க-வுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்… பல்வேறு தேசிய இனங்களின் கூட்டமைப்புதான் இந்தியா. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் தாரக மந்திரம். இதைத் தேர்தல் நேரத்தில் மட்டும் கையில் எடுத்துக் கொண்டு மேடையில் முழங்கும் மோடி, தேர்தல் முடிந்த கையோடு வசதியாக மறந்துகொண்டிருக்கிறார். அடுத்த தேர்தல் வரும்போது மீண்டும் நினைத்துப் பார்க்கிறார்.

அரசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்றாகும்' என்ற நீதி சொன்ன நாடு தமிழ் நாடு. உலகத்துக்கே சட்டத்தையும் யுத்தத்தையும் அன்பையும் முதன்முதலாக போதித்த இந்தத் தமிழ் பூமியிலிருந்து சொல்கிறேன்...தேசிய இனங்களை இழிவுபடுத்தும் எந்த அரசும் நிலைத்து நின்று வென்றதாக வரலாறு இல்லை’!
உங்களின் வரலாறு எழுதப்படுவதற்கும் ஒரு நாள் நிச்சயமாக இருக்கிறதுதானே!

மல்லை’ சி.ஏ.சத்யா
ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர்
முகநூல் பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *