• Fri. Nov 20th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திடீரென 346 சவரன் தங்க நகைகளை அபகரித்துக் கொண்ட வங்கிச் செயலர் மணிகண்டன்..,

ByKalamegam Viswanathan

Nov 20, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வீரப் பெருமாள்புரத்தில் உள்ள கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில், வீரப் பெருமாள்புரம், எஸ்பி நத்தம், வளையங்குளம் , அரசப்பட்டி உள்ளிட்ட 11 கிராமத்தில் உள்ள விவசாயிகள் ஆடு ,மாடு வாங்கி தங்களது வாழ்வாதாரத்தை நடத்துவதற்காக, தங்க நகைகளை அடகு வைத்து பிழைத்து வந்த நிலையில், நகைகளை திருப்புவதற்கு கடனைச் செலுத்தியும் நகைகளை திருப்பித் தராமல் காலதாமதம் படுத்தி வந்த வங்கிச் செயலர் மணிகண்டன், திடீரென 346 சவரன் தங்க நகைகளை அபகரித்துக் கொண்டு மாயமாகிவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக திருமங்கலத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் அலுவலகத்தை கடந்து மூன்று தினங்களாக முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் முறையிட்டும் ,எந்த பலனும் அளிக்காமல் இருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியினருடன் போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம்,

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் கண்ணம்மாள், விரைவில் நகைகளை மீட்டுத் தருவதாக கூறி உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்ட பாதிக்கப்பட்டோர் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில்,

     இன்று மாலை திடீரென துணைப்பதிவாளர் கண்ணம்மாள் தனது அலுவலர்கள் ஆறு பேருடன் வீர பெருமாள்புரத்தில் உள்ள வங்கியினுள் நுழைந்து ஆய்வு மேற்கொண்ட போது, பாதிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, அப்போது கண்ணம்மாள் கையில் வைத்திருந்த கைப்பையில் நான்கு சவரன் நகைகளை கண்ட விவசாயிகள் வாக்குவாதம் செய்த போது கைப்பையுடன் குப்பை தொட்டிகளில் அதனை போட்ட கண்ணம்மாள், அவர்களிடம் மாயமான நகைகளை ஆய்வு செய்ய வந்ததாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் திடீரென நான்கு சவரன் நகை, குப்பை தொட்டியில் எப்படி வந்தது எனவும், பாதிக்கப்பட்டவர்களுடைய பெயர்களில் இந்த நான்கு சவரனுக்கான பெயர் இல்லை என தெரிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை சமரசப்படுத்தினர்.

 பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் சம்பவ இடத்திற்கு வந்த  திருமங்கலம் டிஎஸ்பி இமயவர்மன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், டிஎஸ்பி இமய வர்மனுக்கும் வாக்குவாதம் முற்றியது .30 நிமிடத்திற்கு மேல் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், இறுதியாக டிஎஸ்பி இமயவர்மன் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து உங்களுடைய நகைகளை மீட்டுத் தருவதாக உறுதி அளித்ததன் பேரில், மூன்று மணி நேரமாக நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், நாளை வங்கியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (Joint Registrar ) ஆய்வு நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது