கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள எஸ்.ஆர்.எம். பப்ளிக் பள்ளியில், எஸ்.ஆர்.எம். நிர்வாகத்தின் சார்பில் குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், எக்கோ-லேண்டியாபசுமைத் திருவிழா நவ.14ம் தேதி மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.

இவ்விழாவை பள்ளியின் முதல்வர் ஜோதி தொடங்கி வைத்தார். நிகழ்வில் மண்டல மேலாளர் சையது சலீம், இயக்கப் பிரிவு மூத்த மேலாளர் கார்த்திக் மற்றும் கல்விப் பிரிவு மேலாளர் காவேரி பிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

‘குட்டிச் சூழலியல் வீரர்கள்’ என்ற கருப்பொருளில் அமைந்த இந்நிகழ்வில், இயற்கையைப் பாதுகாத்தல், நீரைச் சேமித்தல் மற்றும் கழிவுகளைக் குறைத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளையாட்டு மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.
இதில் அறிவியல் மற்றும் ஆற்றல் விளக்கக் கூடத்தில், மாணவர்கள் அறிவியல் துப்பறியும் சோதனைகள், புதிர்களை விடுவித்தல் மற்றும் நினைவாற்றல் விளையாட்டுகள் மூலம் தங்களது சிந்தனைத் திறனை வெளிப்படுத்தினர். மேலும், சோப்புக் குமிழ்கள் உருவாகும் விதம், பொருட்கள் நீரில் மிதப்பது மற்றும் மூழ்குவதற்கான காரணம் போன்ற அறிவியல் செயல்முறைகளை நேரில் செய்து காட்டி அசத்தினர்.

கைவினைப் பொருட்கள் மற்றும் படைப்பாற்றல் அரங்கில், நெகிழிக்கு மாற்றாக அழகிய காகிதப் பைகளைத் தயாரித்தல், எளிய பொருட்களைக் கொண்டு மாதிரிகளை உருவாக்குதல் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர். சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருப்போம் என உறுதிமொழி ஏற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ‘உறுதிமொழி மரம்’ அனைவரையும் கவர்ந்தது.
பொழுதுபோக்கு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் மாணவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கவனத்தை மேம்படுத்தும் வகையில் ‘கோமாளிக்கு உணவளித்தல்’, ‘பந்தை ஊதி கோப்பையில் தள்ளுதல்’, ‘வண்ணப் புட்டி சவால்’ மற்றும் ‘நாணயம் சேகரிக்கும் போட்டி’ ஆகியவை நடத்தப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த குறும்படங்கள் திரையிடப்பட்டதோடு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்கள் நடித்த குறுநாடகங்கள் பார்வையாளர்களைச் சிந்திக்க வைத்தன. குறிப்பாக, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைக் கொண்டு ஆடை அணிந்து மாணவர்கள் பங்கேற்ற ‘பசுமை ஆடை அணிவகுப்பு’ விழாவின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தது.
ஆரோக்கிய உணவு மற்றும் பூஜ்ஜியக் கழிவு அரங்கில், பழக் கலவைகள், இனிப்புச் சோளம், சுண்டல் போன்ற சத்தான உணவு வகைகள் வாழை இலை மற்றும் காகிதக் குவளைகளில் வழங்கப்பட்டன. உணவை வீணாக்கக் கூடாது என்பதையும், ‘பூஜ்ஜியக் கழிவு’ பழக்கத்தையும் இது வலியுறுத்தியது. பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகப் பங்கேற்றனர்.

இவ்விழாவில் மழலையர் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும், பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். மேலும், ‘சுபிக்ஷா மழலையர் பள்ளி’ பிரதிநிதிகள் உட்பட 6 வெளிப்புற பார்வையாளர்களும் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளைப் பாராட்டினர்.