• Sun. Nov 8th, 2026

52,000 போதை மாத்திரைகள் பறிமுதல்… 2 பேர் கைது..,

ByKalamegam Viswanathan

Nov 8, 2026

மதுரையில் சுமார் 52,000 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர், இது தொடர்பாக இரண்டு பேரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மாத்திரைகள் ஒரு மாத்திரை ₹400 வீதம் விற்பனை செய்யப்பட்டு வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் பகுதியில் எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் மதுரை வீரன் தலைமை மற்றும் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அவர்கள் இருசக்கர வாகனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் தொடர்ச்சியாக, அவர்களை மதுரை விளாச்சேரி பகுதிக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள முட்புதரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போதை மாத்திரைகளை மீட்டு எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போதை மாத்திரை கடத்தலில் தொடர்புடைய மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சுகந்த கணேஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த ஜெயபாரதி ராஜா ஆகிய இருவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திடீர் நகர் உதவி ஆணையாளர் அசோகன் மற்றும் எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளர் மதுரை வீரன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த ஆய்வைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை தெற்கு துணை ஆணையாளர் இனிகோ திவ்யன் கூறியதாவது:

“காவல்துறையின் வழக்கமான வாகனத் தணிக்கையின் போது இந்த போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இக்குற்ற வழக்கில் தொடர்புடைய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மாத்திரைகள் அனைத்தும் இணையதளம் (Online) வழியாக வாங்கப்பட்டுள்ளது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் இந்த மாத்திரைகளை யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளார்கள் என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து தீவிர விவரங்களைச் சேகரித்து வருகிறோம்.
போதை மாத்திரைகளைப் பயன்படுத்துவதும், விற்பனை செய்வதும் மிகக் கடுமையான குற்றமாகும். இந்த மாத்திரங்களைப் பயன்படுத்தும்போது மனிதர்கள் சுயநினைவை இழந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட நேரிடுகிறது. எனவே, யாராக இருந்தாலும் இதுபோன்ற ஆபத்தான மாத்திரைகளைப் பயன்படுத்த வேண்டாம். இது உடல் நலத்தைப் பாதிப்பதுடன், அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் முற்றிலுமாகச் சீரழித்துவிடும்” என்று எச்சரித்தார்.