• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

பணியின்போது விபத்தில் உயிரிழந்த திருமங்கலம் காவலர்..,

ByKalamegam Viswanathan

Oct 16, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த காவலர் முத்துக்குமார் (48) கடந்த 22.05.2026 அன்று பணியின்போது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி ஜனனிக்கு மகள்கள் ஜித்து (8-ம் வகுப்பு), நைனி ஸ்ரீ(3-ம் வகுப்பு) என இரண்டு பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
கணவரின் இறப்பிற்கு பிறகு கடந்த 6 மாதங்களாக அரசாங்கத்தில் இருந்து எந்தவித நிதியுதவியும், எந்த பலனும் தனக்கு கிடைக்கவில்லை என ஜனனி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் ஜனனி கூறியதாவது:

என் கணவர் மதுரையில் அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பு பணியில் கூட இருந்தவர். ஏழு வருஷம் பாதுகாப்பு பணியில் இருந்தார். இப்போது சாலை விபத்தில் இறந்துவிட்டார். அவரை காப்பாற்ற நகை, நட்டு எல்லாம் விற்று, ஹாஸ்பிடலில் இரண்டு மூன்று மாதம் பார்த்தும் காப்பாற்ற முடியவில்லை.

இப்போது இரண்டு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு வாடகை வீட்டில் கஷ்டப்படுகிறேன். வாடகை கொடுக்கக் கூட காசு இல்லை. பிள்ளைகளின் பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் , கடந்த 10 நாட்களாக பிள்ளைகள் பள்ளிக்கே செல்லவில்லை. தண்ணி கஞ்சி இல்லாமல் பட்டினியாக கிடக்கிறோம்.

அரசிடம் மனு கொடுத்தேன். 3, 4 முறை மனு கொடுத்தும் பார்த்துவிட்டு தூக்கி போடுகிறார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு எந்த சொந்த பந்தமும் இல்லை.

சென்னை சென்று முதலமைச்சரை பார்க்க முயன்றபோதும் அனுமதிக்கவில்லை என்றும், தான் விஜய் அண்ணனை பார்க்க சென்றபோது போலீசார் தன்னை நாயை விட கேவலமாக நடத்தி வெளியே தள்ளியதாகவும் கண்ணீர் மல்க குற்றம் சாட்டினார்.

மேலும், எனக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு நீதி வேண்டும். என் கணவரின் வேலையை கருணை அடிப்படையில் எனக்கு போட்டுக் கொடுத்தால், என் இரண்டு பிள்ளைகளை வைத்து பிழைத்துக் கொள்வேன் என் பிள்ளைகளின் படிப்பு செலவுக்கு கூட உதவி இல்லை. தயவு செய்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

அவரது மூத்த மகள் ஜித்து கூறுகையில்,

அப்பாவும் இல்லை, எங்களை யாரும் பார்க்க விடவில்லை. பள்ளிக்கு பீஸ் கட்டாததால் ஒரு வாரமாக பள்ளிக்கு போகவில்லை என்றார்.

மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர் முத்துக்குமாரின் குடும்பத்திற்கு எவ்விதத்திலும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.