அரசுப்பள்ளிகளில் 10- ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று 31-01-2026 ( சனிக்கிழமை) நடைபெற்ற தேர்விற்கு 5574 மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததில் 23 தேர்வு மையங்களில் இன்று காலையில் நடைபெற்ற கணிதத்தேர்வினை 4432 மாணவர்கள் எழுதினார்கள்.142 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. புதுக்கோட்டை திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதே போல மதியம் நடைபெற்ற அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வினை 4431 மாணவர்கள் எழுதினார்கள்.143 மாணவர்கள் தேர்வினை எழுத வரவில்லை. மற்ற அனைவரும் வந்து கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.










