பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் கடந்த 27ம் தேதி கோவையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொள்ளாச்சி , உடுமலை வழியாக நடந்து வந்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் இன்று மாலை பழனி வந்தடைந்தார். தொடர்ந்து பழனி சண்முக நதியில் புனித தீர்த்தம் தெளித்துக் கொண்டு, தைப்பூசத் திருவிழா நடைபெறும் பழனி பெரியநாயகி அம்மன் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பழனி மலை கோவிலுக்கு சென்ற வானதி சீனிவாசன் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தார். பாதயாத்திரையாக பழனி வந்த சீனிவாசனுக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட தலைவருமான கனகராஜ் மற்றும் மகளிரணியினர் உள்ளிட்ட பலர் பங்கேற்று வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் தெரிவித்ததாவது :-
பழனிக்கு பாதயாத்திரையாக விரதமிருந்து வந்திருப்பதாகவும், பழனிக்கு வருகைதரும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனிதநதியான சண்முகநதிக்கு சென்று நீராடி செல்வதுதான் நமது மரபு.ஆனால் இன்று புனித நதியான சண்முகநதி முழுக்கமுழுக்க சுகாதாரசீர்கேடு அடைந்துள்ளது. பழனி வரும் பக்தர்கள் சண்முகநதியில் இறங்க யோசிக்கும் அளவிற்குதான் திராவிட மாடல் அரசு ஹிந்து பக்தர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கிறது. சட்டப்பேரவையில் இதுகுறித்து கேட்டால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வாய்கிழிய பேசுகிறார். திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதாக பேசுகிறார். இன்று தமிழர்களுடைய அடையாளம் என்பது முருகன், விபூதி, கோவில்கள் ஆகும்.

ஆனால் திராவிட மாடல் என்று சொல்லி இவற்றையெல்லாம் பிரித்து ஆன்மாவையே பிரித்து எடுத்துவிட்டு திமுக அரசு தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. இந்த ஊழல் மிகுந்த, பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒவ்வொருநாளும் தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்துகிற இந்த அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைத்து மத்தியில் பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் எல்லாம் அமல் படுத்தப்பட்டு தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்ல பழனி முருகன் அருள்புரிய வேண்டுமென வேண்டுதலுடன் வந்திருப்பதாக தெரிவித்தார். மேலும் 234 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும், இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக சார்பில் பலர் வெற்றிபெற்று சட்டசபைக்கு செல்வோம் என்றும், பழனியை மாவட்டமாக அறிவிக்கக் கோரி வலியுறுத்தி பாஜக சார்பில் நடத்தப்பட உள்ள ஆர்ப்பாட்டத்தில் கட்சி மேலிடம் சொன்னால் கண்டிப்பாக பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கூட்டத்தை பிரதமர் மோடி மதுராந்தகத்தில் துவக்கி வைத்துள்ளார். லட்சக்கணக்கானோர் கூடிய கூட்டத்தை கண்டு திராவிட மாடல் அரசில் உள்ளவர்கள் மிகுந்த பதற்றத்தில் உள்ளார்கள். அதனால்தான் டப்பா எஞ்சின் என்று பேசுகிறார்கள். டப்பா, டோப்பா ஆகியவை எல்லாம் எங்களுக்கு தெரியாது என்றும், இதையெல்லாம் திராவிட மாடல் அரசுதான் செய்துவருகிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதயாத்திரயை நிறைவு செய்த வானதி சீனிவாசன் சாமி தரிசனம் செய்த பிறகு மீண்டும் கோவைக்கு திரும்பினார்.






