• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனியார் துறை ஓய்வூதியர்கள் கோரிக்கை சட்டப்பேரவையில் எதிரொலிக்குமா? –

ByKalamegam Viswanathan

Jan 20, 2026

பஞ்சாலைகள், டிவிஎஸ், ஃபென்னர் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தொழிலாளர்கள், தங்களது ஓய்வூதியத் தொகையை சமூக நலத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும் என வைத்துள்ள கோரிக்கை நாளை தொடங்கும் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிரொலிக்குமா?

டிவிஎஸ், ஃபென்னர், பஞ்சாலைகள் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் தற்போது ரூ.1000 மட்டுமே ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், கூடுதலாக மேலும் ரூ.1000ஐ சமூக நல நிதியிலிருந்து தமிழக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுப்பி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்ட ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பாக, மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தை இன்று தொடங்கினர். மதுரை செல்லூரில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் இதற்கான மின்னஞ்சல் அனுப்பும் நிகழ்வு இன்று தொடங்கியது.

இதுகுறித்து மதுரை மாவட்ட EPF ஓய்வூதியர் நல சங்கத்தின் செயலாளர் திலகர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கடந்த 1995 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கால் தனியார் துறை ஓய்வூதியர் நலத்திட்டம் தொடங்கப்பட்டது. மிகக் குறைந்த ஓய்வூதிய தொகையில் தொடங்கப்பட்டு தற்போது ரூ.1000லிருந்து அதிகபட்சம் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையில் ரூ.4 ஆயிரம் வரை தொழிலாளர்கள் பெற்று வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக இந்தத் தொகையில் எந்தவித மாறுதலும் மத்திய அரசாங்கத்தால் செய்யப்படவில்லை.

இதற்காக நாடாளுமன்றத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர். பாஜக உறுப்பினர்கள் கூட இதற்காக பேசியுள்ளனர். ஆனால் நிதி அமைச்சரோ பிரதமர் மோடியோ இது தொடர்பாக எந்தவித கவனமும் கொடுக்கவில்லை. மாறாக பெருந்தொழில் நிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்) நிதியை வாரி வாரி கொடுக்கிறார்கள். தனியார் துறை ஓய்வுதியர்கள் பெரும்பாலும் 60 வயதைக் கடந்து தற்போது 70-75 வயது உடையவர்களாக பெரும்பாலானோர் உள்ளனர். இவர்கள் இந்தியா முழுவதும் 80லிருந்து 90 லட்சம் பேர். தமிழகத்தில் மட்டும் ஒன்பது லட்சம் பேர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேர் தனியார் துறை ஓய்வூதியர்கள் உள்ளனர். மத்திய மோடி அரசிடம் தொடர்ந்து பல்வேறு வகையில் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இதுவரை எங்கள் கோரிக்கைக்கு இவர்கள் செவிமடுக்கவில்லை.

தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களான கேரளா பாண்டிச்சேரி கர்நாடகா ஆந்திரா மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்கள் அந்தந்த மாநில அரசு சமூக நலத்திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூபாய் ஆயிரத்தை தனியார் துறை ஓய்வூதியர்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆகையால் இதனை முன் உதாரணமாகக் கொண்டு தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் எங்களுக்கான ஓய்வூதிய தொகையை கூடுதலாக வழங்குவதற்கு முன்வர வேண்டும். சமூக நலத்திட்டத்தின் கீழ் எவ்வாறு முதியோர்களுக்கு ஓய்வூதியம் தருகிறார்களோ அதே போன்று எங்களுக்கும் வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 2000 அல்லது 3000 வரை வழங்கினால் 60 – 70 வயதை தாண்டிய எங்களது ஓய்வூதியர்களுக்கு பேருதவியாக இருக்கும். இதனை வலியுறுத்தி கடந்தாண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர்களிடம் நாங்கள் கோரிக்கை மனு அளித்தோம். ஆளுநர் மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியுள்ளோம். தலைநகர் சென்னையில் இது தொடர்பாக பலகட்ட போராட்டங்களை நாங்கள் நடத்தினோம். பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களிடமும் நாங்கள் மனு அளித்துள்ளோம்.

நாளை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது அடுத்து தமிழக முதல்வரின் நேரடி கவனத்திற்கு எங்கள் கோரிக்கையை கொண்டு செல்லும் முயற்சியாக மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தை இன்று தொடங்கி நடத்தி வருகிறோம். தற்போது வரை 200 பேர் மின்னஞ்சல் அனுப்புவதற்கு தயாராக உள்ளனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்களது இந்த கோரிக்கைக்கு கவனம் கொடுக்க வேண்டும். ஏழை எளிய வயது முதிர்ந்த ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு இந்த பலன் சென்று சேர வேண்டும்.

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் உள்ளன. எங்களைப் போன்ற தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமும் குறைந்தபட்சம் ரூபாய் ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சத்திற்கு மேல் வருங்கால வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்து சேமிப்புச் செய்துள்ளார்கள். ஆனால் அதற்குரிய நியாயமான ஓய்வூதிய தொகையை வழங்குமாறு நாங்கள் கேட்கிறோம்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் உதிரிகளாக இருப்பதால், அவர்களது கோரிக்கைக்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறக்குறைய வெறும் 12000 பேர் எனும்போது, அவர்களை ஓட்டு வங்கியாக கூட இந்த அரசியல் கட்சிகள் பார்க்க மறுக்கின்றன. ஆனால் இந்த முறை நாங்கள் இதனை விடப்போவதில்லை. வருகின்ற 2026 சட்டசபை தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் வாக்குறுதியில் எங்களது கோரிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனை ஆளுகின்ற திமுக அரசுக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

மத்திய அரசின் EPS-95 (Employees’ Pension Scheme, 1995) ஓய்வூதியத் திட்டத்தின் மொத்த நிதி (corpus) கடந்த மார்ச் 2025 வரை ரூ.9.95 லட்சம் கோடி உள்ளது என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இது Employees’ Provident Fund Organisation (EPFO) மூலம் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.