மோட்டார் வாகன அபராதம் ஆர்.டி.ஓ அபராதம் செலுத்துவது போல போலியான செயலியை அனுப்பி முதியவரிடம் மொபைலை ஹேக் செய்து ரூபாய் 16.49 லட்சத்தை திருடிய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பலை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சூரத்தில் வைத்து கைது செய்தனர்.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதி சேர்ந்த சாமுவேல் சந்திரபோஸ் வயது 71 என்பவர், கடந்த 2025 செப்டம்பர் மாதம் வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜ் வந்து உள்ளது.
அதில் போக்குவரத்து அபராதம் செலுத்தும் படி ஒரு லிங்க் மற்றும் apk வடிவிலான செயலி இருந்தது. தனது வாகனத்திற்கு அபராதம் உள்ளதா ? என பார்க்க அந்த செயலியை அவர் பதிவு இறக்கம் செய்து உள்ளார்.

அந்த நொடியே அவரது மொபைல் போன் மர்ம நபர்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. அடுத்த நாள் அவரது மொபைலுக்கு வந்த ஒ.டி.பி களை பயன்படுத்தி அவரது வங்கியில் இருந்து வைப்புத் தொகை உட்பட மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 49 ஆயிரத்து 961 ஆன்லைன் மூலம் திருடப்பட்டது.
பாதிக்கப்பட்ட சாமுவேல் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர ஆணையர் கண்ணன் உத்தரவுப்படி ஆய்வாளர் அழகுராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருடப்பட்ட பணம் 12 தவணைகளாக பல்வேறு கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர். குற்றவாளிகள் குஜராத் மாநிலம் சூரத்தில் இருப்பதை உறுதி செய்த தனி படை அங்கு விரைந்து சென்று பத்லியா ரஜ்னி பாய் தஸ்வபாய், விஸ்வா பாய் ஹிம்மத் பாய் ரடாடியா, ராடாடியா சவன், கோஹில் விஜய் தயாள் பாய், ரத்தோர் ஜிதேந்திர சிங் ஷ்ரவன்சிங், கிராசே மகேந்திர சிங் தாகேசிங், சோவாடியா மிரல் மனோஜ் பாய், கபில் ராஜு பாய் கோத்ரே, சோவடியா மீட் மனோஜ் பாய், பால் சந்தன் ஜெயநாத் ஆகிய பத்து பேரை கைது செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூபாய் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பணம், கிரெடிட் டெபிட் கார்டுகள் 311, பத்து மொபைல் போன்கள், பைப்பிங் மிஷின் மற்றும் காசோலை புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 6.39 லட்சம் முடக்கப்பட்டு உள்ளது.
மொபைல் போனை ஹேக் செய்து கைவரிசை காட்டிய குஜராத் கும்பல் 10 பேரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .




