கன்னியாகுமரி, நவம்பர் 29 — கலை, கலாசாரம், ஆஸ்கர் புத்தகத்தில் இடம்பிடிக்கும் உலகச் சாதனை முயற்சி நவம்பர் 30ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த உலகச் சாதனை முயற்சியில் பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே, யோகா போன்ற துறைகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
இது குறித்து கே.கே.ஆர் அகடமியின் இயக்குனர் டாக்டர் ஹன்சி ராஜ் கன்னியாகுமரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பரதநாட்டியம், சிலம்பம், கராத்தே, யோகா போன்ற துறைகளில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி ஆஸ்கர் சாதனையாளர் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் சாதனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நாளை கன்னியாகுமரியில் நடக்கிறது.
தமிழ்நாடு கலை மற்றும் கலாசார கவுன்சிலின் மேற்பார்வையில், இந்திய கலாசார அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்று இந்த நிகழ்வை கன்னியாகுமரி கே.கே.ஆர் அகாடமி ஏற்பாடு செய்துள்ளது.
நீதிபதிகள் குழு
இந்த நிகழ்வுக்கான தேசிய மட்ட நடுவர் குழுவில், இந்திய கலை மற்றும் கலாசார சம்மேளன தேசிய தலைவர் டாக்டர் அரவிந்த் லட்சுமிநாராயணன், ஆஸ்கர் புக்ஸ் ஆஃப் ரிகார்ட்ஸ் தேசிய தீர்ப்பாயர் டாக்டர் லாவண்யா ஜெயக்கர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
கன்னியாகுமரி பெரியார் நகர், சி.எஸ்.ஐ சர்ச் கலையரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது நாளை மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.
700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் இருந்து 700க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த உலகச் சாதனை நிகழ்வில் பங்கேற்கின்றனர். இளம் தலைமுறையின் உடல் நலம், மன உறுதி, கலை வெளிப்பாடு, தற்காப்புத் திறன் என பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
இளைஞர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் இத்தகைய பயிற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என டாக்டர் ஹன்சி ராஜ் தெரிவித்தார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமைகளை கண்டறிந்து வளர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கன்னியாகுமரியில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் கலை, கலாசார நிகழ்வு உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடிக்கும் எதிர்பார்ப்பில் மாணவர்களும், பெற்றோர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.








