கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வது தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் காளப்பட்டி சாலையில் சென்ற போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்று இருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசாவை சேர்ந்த பிஜய் குமார் மொகந்தி, தனுஷ் ஷா என்பதும், ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கோவைக்கு ரயில் மூலம் கடத்தி வந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார் அந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 10 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போன்று காந்திபுரம் பாரதியார் சாலையில் கஞ்சா விற்ற கோகுல்நாத், ரத்தினபுரி சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள சுடுகாட்டு அருகே கஞ்சா விற்ற மாணிக்கம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தத்தில் கோவையில் கஞ்சா விற்ற 4 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.








