கோவை: பரோலில் வெளிவந்த நன்னடத்தையாக வாழ்ந்து வந்த சிறைவாசிகள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாகவும் தமிழக அரசு பரிசீலித்து அவர்கள் வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனையில் இருந்து பரோலில் வெளிவந்த 22 இஸ்லாமியர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் பரோல் கிடைக்கவோ, அல்லது விடுதலை செய்யவோ அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைவாசிகளின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர், திமுக அரசு பொறுப்பு ஏற்றத்தை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இந்த அமைப்பினர் உட்பட பலர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை குறிப்பிட்ட அவர் 22 முஸ்லிம்களின் விடுதலை மறுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக அவர்களின் மதமும் வழக்குகளும் சுட்டிக்காட்டப்பட்டதாக தெரிவித்தார்.
பொது மன்னிப்பை என்பதில் எந்த ஒரு மதமும் வழக்குகளும் எடுத்துக்கொள்ள தேவையில்லை என்றும் சிறையில் இருக்கும் பொழுது அவர்களது நன்னடத்தைகள் மட்டுமே சுட்டிக்காட்டப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதை குறிப்பிட்டு இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு நீதி அரசர் ஆதிநாதன் குழுவின் பரிந்துரை என்பதை மனிதாபிமான அடிப்படையில் 13 பேருக்கு விடுதலையும் 22 பேருக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை என பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டதை தெரிவித்தார்.
ஆனால் தற்பொழுது நீதியரசர்கள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வில் அந்த பரோல் ரத்து செய்யப்பட்டதால் மீண்டும் அவர்கள் சிறைக்குச் சென்றதாக தெரிவித்தார். இதன் காரணமாக பரோலில் வெளிவந்து நன்னடத்தை மேற்கொண்டு குடும்பத்தை பார்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அவர்கள் சிறைக்குச் சென்றதால் குடும்பத்தினர் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக தெரிவித்தார். எனவே இதில் உடனடியாக தமிழக அரசு கவனம் செலுத்தி மீண்டும் அவர்களுக்கு பரோல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் பரோலில் வெளிவந்து நன்னடத்தை அடிப்படையில் வாழ்ந்து வரும் அவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் சிறைவாசிகளை அவர்களது குடும்பத்தினர் சந்திக்க செல்லும் பொழுதும் அடிப்படை பொருட்களை கொண்டு செல்கின்ற பொழுதும் பல்வேறு இடையூறுகள் விதிக்கப்படுவதாக காத்திருப்போர் அறைகள் தகுந்த வசதிகள் இல்லாமல் குடும்பத்தார் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர் என தெரிவித்த அவர் எனவே இதனை உளவுத்துறை அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது குறித்து பேசிய சிறைவாசிகளின் குடும்பத்தார், 22 பேரும் சிறையில் இருந்து வெளிவந்து நல்ல முறையில் வாழ்ந்து வந்ததாகவும் ஆனால் தற்பொழுது மீண்டும் அவர்கள் சிறைக்கு செல்லப்பட்டது குடும்பத்தினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தின கூலிகளாக வேலை செய்து வாழ்வாதாரத்தை ஈட்டி வந்ததாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் தற்பொழுது அவர்களுக்கு வயது அதிகமாகி விட்டதாக குறிப்பிட்ட அவர்களது குடும்பத்தினர் தமிழக அரசு உடனடியாக இதில் கவனம் செலுத்தி அவர்கள் மீண்டும் சிறையில் இருந்து வெளிவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு இதனை செய்யும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர்.








