ஐ.பெரியசாமி மகள் வீட்டில் 8 மணி நேரம் நீடித்த ஜி.எஸ்.டி ரெய்டு; முக்கிய ஆவணங்கள் பறிமுதல் திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திராவின் வீட்டில் வரி ஏய்ப்பு தொடர்பாக ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் வீட்டில், ஜிஎஸ்டி (GST) நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திண்டுக்கல் ஆர்.எம். காலனி, சிவாஜி நகரில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் உள்ள மூன்று நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். இந்நிலையில், கோவையிலிருந்து வந்த ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில் இரண்டு கார்களில் இந்திராவின் வீட்டிற்கு வந்தனர். பெண் அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட இந்தக் குழு, ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாகச் சோதனை நடத்த வந்திருப்பதாகக் கூறி தீவிர சோதனையில் ஈடுபட்டது.
வீட்டின் அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்ற நிலையில், மாலை 6 மணியளவில் அதிகாரிகள் தங்கள் காரில் இருந்த ‘பிரிண்டர்’ (Printer) இயந்திரத்தை வீட்டிற்குள் எடுத்துச் சென்றனர். அங்கிருந்த மடிக்கணினி (Laptop) மற்றும் கணினித் திரையைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் நகல் (Copy) எடுத்துக்கொண்டனர். மதியம் 1:30 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 9 மணி வரை சுமார் 8 மணி நேரம் நீடித்தது. சோதனையின் முடிவில், மென்பொருள் தொடர்பான ஆவணங்களையும் (Software documents), வேறு சில முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர்.
இதே நேரத்தில், வத்தலகுண்டு அருகே இந்திராவின் கணவர் துவாரகநாதன் நடத்தி வரும் ஆயத்த ஆடை (Garments) நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது. அங்கும் 5-க்கும் மேற்பட்ட நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் இரண்டு கார்களில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை நடைபெறும் தகவல் பரவியதும், தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்திராவின் வீட்டு முன்பு குவிந்தனர். வெளியே வந்த இந்திரா, அவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். இருப்பினும், சிலர் வீட்டின் முன்பு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவர்களை எச்சரித்து அப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி, அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் மகள் இந்திரா ஆகியோரின் வீடுகள் மற்றும் இந்திராவுக்குச் சொந்தமான மில்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அந்தச் சோதனையின் போது மில்களில் வரி ஏய்ப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி அதிகாரிகளின் சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.








