எர்ணாகுளம் பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று பிரதமர் அவர்களால் துவங்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாளான இன்று எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற சிறப்பு வந்தே பாரத் ரயில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தடைந்ததும் ரயில் பயணிகள், தொழில்துறையினர், கல்லூரி மாணவர்கள், பாஜகவினர் என பல தரப்பினரும் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாநகர மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், சேலம் கோட்டை ரயில்வே மேலாளர் பன்னா லால், கூடுதல் மேலாளர் சரவணன் மற்றும் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கல்லூரி மாணவர்கள் மற்றும் ரயில்வே அலுவலர்கள் சார்பில் தேசப்பற்றுமிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் வந்தே பாரத் ரயில் சேவை குறித்து நடத்தப்பட்ட ஓவியம் மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேட்டியளித்த சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், இந்த ரயில்சேவை பலதரப்பட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும், கூடுதல் ரயில் சேவைகள் குறித்தும் மக்களிடம் இருந்து கோரிக்கை உள்ளது. அது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.

பின்னர் பேசிய கூடுதல் மேலாளர் சரவணன், இந்த ரயில் சேவை மூலம் குறைந்த நேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவித்தார். போத்தனூர் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரூ. 98 கோடி செலவில் டெண்டர் நிலையில் உள்ளது என தெரிவித்த அவர், இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்குள் அது செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
கோவையில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலில் தற்பொழுது எட்டு பெட்டிகள் உள்ள நிலையில் அதனை 16 பெட்டிகளாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் தெரிவித்தார்.
வந்தே பாரத் சிறப்பு ரயிலில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருக்கு பயணம் செய்த பயணிகள், இந்த ரயில் தொழில் நகரங்களான கோவை மற்றும் பெங்களூரை இணைப்பதால் தொழில்துறையினருக்கு பெரிதும் பயனளிக்கும் எனவும், ஐடி ஊழியர்கள் விரைவாக பயணிக்க இந்த ரயில் உதவும் எனவும் தெரிவித்தனர்.











; ?>)
; ?>)
; ?>)