மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷான் 2025 அறிக்கை இந்தியாவின் அழுக்கடைந்த நகரங்களுள் (Dirtiest Cities) முதன்மையானதாக மதுரையைப் பட்டியலிட்டு அதிர்ச்சியளித்துள்ள நிலையில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட மாமதுரை அன்று தொடங்கி தன்னுடைய இன்றைய அவலநிலை வரை கண்ணீரோடு பகிரும் சிறப்புத் தொகுப்பு.
கூட கோபுரம், மாட மாளிகை என ஒரு காலத்தில் உயர்ந்து நின்ற மாமதுரை பேசுகிறேன். மொழிக்கென்று சங்கம் வைத்து, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நான்மாடக்கூடல் மதுரைதான் பேசுகிறேன். ‘மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை’ என தாமரை மலரைப் போன்ற அழகிய கட்டமைப்பில்தான் நான் இருந்தேன் என்பதற்கு சங்க இலக்கியமான பரிபாடலே சான்று. என்னுடைய கோட்டைச் சுவர்களை வைகையின் அலைகளன்றி வேறு எவரும் மோத முடியாது என சங்கப் பாடல்கள் பாடியிருப்பதைவிட வேறென்ன சான்று வேண்டும் என்னுடைய நகர அழகுக்கு? என் மண்ணை ஈசனே தூக்கிச் சுமந்த புராணம் எனக்கான பெருமை அல்லவா? ஆனால், அழுக்கடைந்த இந்திய நகரங்களில் இன்று நான் முதலிடம் என்பதை எங்கே போய் யாரிடம் நொந்து கொள்வது?

உலகின் மிக நீண்ட பேரரசைக் கட்டமைத்த பாண்டியர்களின் தலைநகரான என்னுள் இருந்துதான் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்குள் பிரிந்து சென்றன. 1971ஆம் ஆண்டு தமிழகத்தின் 3ஆவது பெரிய மாநகராட்சியாக நான் உருவானேன். 72 வார்டுகளிலிருந்து 100 வார்டாக விரிவாக்கம் பெற்ற எனது மாநகராட்சி பரப்பெல்லை 147 ச.கி.மீ. உலகப்புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் இன்றைய அடையாளமாகத் திகழ்ந்தாலும், மெகஸ்தனிஸ், கௌடில்யர் போன்ற தூதுவர்களால் உலகப் பெருமையை அன்றே நான் பெற்றிருந்தேன். தமிழக அரசியல் மற்றும் திரைப்பட வரலாற்றில் தனித்த இடம் இன்றளவும் எனக்கு உண்டு. செல்லூர் கண்மாய், வண்டியூர் கண்மாய், மாடக்குளம் கண்மாய், தென்கால் கண்மாய் ஆகியவற்றோடு எனது மடியில் பல்லாயிரம் ஆண்டுகளாய் தவழ்ந்தோடும் வைகை என பல நீர்நிலைகள் சூழ்ந்துள்ளதாலே ‘கிழக்கின் ஏதென்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறேன். மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் என் தலைமுறைப் பிள்ளைகள் சுமார் 15 லட்சம் பேர். ஆனால் பொறுப்பற்றுப் போன இவர்களாலும் நான் சீரழிக்கப்பட்டு வரும் என் வேதனையை சொல்லில் வடிக்க முடியாது தவிக்கின்றேன்.
பேருந்து நிலையங்கள், ரயில் சந்திப்பு, விமான நிலையம், தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் என பன்முகத்தன்மையோடு வளர்ந்துள்ள நான், எனக்காகப் பேச 5 சட்டமன்ற உறுப்பினர்களை மாநகராட்சி அளவிலும் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களை மாவட்ட அளவிலும் கொண்டுள்ளேன். இந்திய நாடாளுமன்றத்தில் எனது குரல் ஓங்கி ஒலிக்க ஒரு எம்.பி.யும் உண்டு. ஆனால், இந்த மண்ணைக் கைப்பற்ற இவர்கள் அடித்துக் கொள்ளும் சண்டையாலும் பேராசையாலும் கவனிப்பாரற்றுப் போய்விட்டேன். கிருதுமால் (13.1 கி.மீ.), பந்தல்குடி (3 கி.மீ.), பீபீகுளம் (700 மீ), அனுப்பானடி (4.9 கி.மீ.), பனையூர் (5.9 கி.மீ.), அவனியாபுரம் (8.5 கி.மீ), சொட்டதட்டி (5.9 கி.மீ), சிந்தாமணி (5.6 கி.மீ), விளாங்குடி (1.9 கி.மீ), மானகிரி (600 மீ), கோசாகுளம் (1.5 கி.மீ), பரசுராம்பட்டி (1.9 கி.மீ), சொக்கிகுளம் (450 மீ) என எனக்குள் ஓடும் பாசன வாய்க்கால்களின் மொத்த நீளம் 54.1 கி.மீ. ஆகும். ஆனால் அவற்றிலெல்லாம் தண்ணீரா ஓடுகிறது? சாக்கடையும், கழிவுகளும் கலந்து என் கண்ணீரல்லவா ஓடுகிறது? 207 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைத் திட்டமும், 165 கி.மீ. நீளத்திற்கு திறந்த வடிகால் திட்டமும் பயனளிக்கிறதா என்பதற்கு எவரிடமும் பதில் இல்லை.
என்று மதுரை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதோ அன்று தொடங்கிய சீரழிவுதான் இன்றைக்கு இவ்வளவு பெரிய அவப்பெயருக்கு காரணம் என்று சொல்லும் வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜனின் குமுறலில் உண்மையில்லை என்று யாராவது சொல்ல முடியுமா..? மேலும் அவர் கூறுவதைக் கேளுங்கள், ‘இங்கே உள்ள மக்கள் பிரதிநிதிகள் தங்களது கட்சி அரசியலுக்காகத்தான் மதுரையைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, மதுரை மாநகரின் வளர்ச்சி குறித்த அக்கறை இல்லை. மாநகரை நாள்தோறும் தூய்மை செய்யக்கூடிய பணியாளர்களின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க ஒருவருமில்லை. வைகையாற்றுக்குள்ளும் அதன் கரையிலும் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 21 லட்சம் டன் குப்பைகள் கொட்டப்படுகின்றன. சுற்றுலா பயணிகள் அதிகமாக வரக்கூடிய மீனாட்சி கோவிலைச் சுற்றியும்கூட அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது. பின்தங்கிய கிராமத்தைப் போன்றுதான் மதுரை இருக்கிறது’ என்கிறார்.
நாளொன்றுக்கு மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 80 மில்லியன் லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறதாம். ஆனால் இவற்றை சுத்திகரிப்புச் செய்ய அவனியாபுரம் மற்றும் சக்கிமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு நவீன முறையில் நாள்தோறும் 35 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படுகிறது என்கிறார்கள். அப்படியானால் மீதமுள்ள கழிவு நீர்..? நாளொன்றுக்கு சேரும் திடக்கழிவின் அளவு 850லிருந்து 900 டன். சேகரமாகும் திடக்கழிவுகள் வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறதாம்.
கோவில் மாநகரமான நான் குப்பைகளின் கூடாரமாய் மாறிப்போன அவலத்திற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு சமமாக பொதுமக்களும்தான் காரணம் என்கிறார் இந்தியன் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன். மேலும் அவர், ‘நகருக்குள் சாலை அமைக்கும் பணியின்போது மாநகராட்சிப் பொறியாளர்கள் யாரும் இருப்பதில்லை. ஆனால் தற்காலிகப் பணி செய்யும் தொழில்நுட்பப் பணியாளர்தான் இருக்கிறார். மழைநீர் சேமிப்புக் கால்வாய் அமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றிலெல்லாம் கழிவுநீர் மட்டும்தான் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அவனியாபுரம் கால்வாயில் மாநகராட்சியே கழிவுநீரைக் கலக்கிறது. இந்தக் கால்வாய் செல்லும் வழியில் அமைந்துள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது’ என சுட்டிக் காட்டும் மோகனின் கருத்து எனக்கு மிகவும் வேதனைதான் தருகிறது.
மத்திய அரசின் ஸ்வச் சர்வேக்ஷான் 2025 அறிக்கை’ 10 லட்சத்துக்கு அதிகமானோர் வசிக்கும் நகரங்களின் தூய்மை நிலை குறித்த தேர்வில் மதுரையை (4823 மதிப்பெண்), மிகவும் அழுக்கடைந்த இந்திய நகரங்களில் முதலாவதாக பட்டியலிட்டுள்ளது. மத்திய வீட்டு வசதி நகர்ப்புற விவகார அமைச்சகம் நான்கு விதமான அளவுகோல்களின் அடிப்படையில் தேர்வு செய்கிறது. 1. சேவை நிலை முன்னேற்றம் (எஸ்எல்பி), 2.குடிமக்கள் கருத்து, 3. சான்றுகள் 4. மூன்றாவது தரப்பின் நேரடி மதிப்பீடு என இவை ஒவ்வொன்றுக்கும் முறையே 3,000; 2500; 2250; 2250 என 10 ஆயிரம் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றனவாம்.
என்னுடைய மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொறுப்பு அலுவலர்களாகவே பணி புரிந்தால், பிறகு எப்படி நிர்வகிக்க முடியும்? தற்போது மேயர், மண்டலத் தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் என எவரும் இல்லாத நிலையில், மக்கள் யாரிடம் தங்களது குறைகளைச் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் ஆர்டிஐ ஆர்வலர் ஹக்கீம். மாநகராட்சியின் பல்வேறு ஊழல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்தவர். ‘லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய இந்தியாவின் முக்கியமான நகரம் இன்று தலைகுனிந்து நிற்கிறது. மதுரை மாநகரின் தூய்மை என்பது மாநகராட்சி நிர்வாகத்தைச் சார்ந்தது. இந்தியாவில் எந்த மாநகராட்சியிலும் நடைபெறாத அளவிற்கு மிகப் பெரிய ரூ.200 கோடி வரி முறைகேடு மதுரையில்தான் நடந்துள்ளது. விஞ்ஞான முறையிலான ஊழலிலும், தூய்மைக் கேட்டிலும் முன்னணியில் உள்ளது மதுரை மாநகராட்சிதான். இதனைச் சரி செய்யும் பொறுப்பில் உள்ள மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையிலிருந்து பொறுப்பு அலுவலர்களாக பணி நியமனம் பெற்றிருப்பது எப்படி சரியாகும்..?’ என ஹக்கீம் எழுப்புகின்ற கேள்வியை எப்படி கடந்து செல்ல முடியும்?
மாநகருக்குள் கோரிப்பாளையம் மற்றும் மேலமடை சந்திப்பில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளால் சூழலியல் பிரச்சனைகள் எழுந்தாலும், கால்வாய் சீரமைப்புப் பணிகளை சீர்மிகு நகரம், அம்ருத் திட்டங்களின் வாயிலாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கடந்த முறை மழை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட செல்லூர், மீனாட்சிபுரம் போன்ற பகுதிகள் இந்த முறை அதுபோன்ற பாதிப்பிலிருந்து தப்பியதற்கு காரணம், இதுவரை நடைபெற்ற சீரமைப்புப் பணிகள்தான் என மாநகராட்சி சமாதானம் செய்தாலும் இழந்துபோன என்னுடைய பாரம்பரியப் பெருமையை மீட்டெடுத்து மானம் காக்க என் மக்களும் முன் வர வேண்டும் என்பதுதான் இந்த மாமதுரைத் தாயின் வேண்டுகோள்.











; ?>)
; ?>)
; ?>)