தீபாவளி பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவையில் உள்ள சிங்காநல்லூர், காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையம், கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்து நிலையம் மட்டுமின்றி நகர பேருந்து நிலையங்களிலும் கூட்டம் அலைமோதி வருகிறது.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி செயின் பறிப்பு, பிக்பாக்கெட், திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து பிடிப்பதற்காக காவல் துறையினர் ட்ரோன் கேமராக்களை பேருந்து நிலையங்களை பறக்க விட்டு ஏதேனும் குற்றவாளிகளின் நடமாட்டம் உள்ளதா ? குற்ற செயல்கள் நடைபெறுகிறதா என்றும் குற்றால நெரிசலால் தள்ளுமுள்ளு போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று ட்ரோன் கேமரா மூலம் பார்த்து கண்காணித்து வருகின்றனர். இதனால் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் பொதுமக்களை எளிதாகவும், விரைவாகவும் கண்காணித்து அதனை தடுக்க முடியும் என்று காவல் துறையினர் தகவல் தெரிவித்து உள்ளனர்.
