முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 1683 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்குப் பருவ மழை முடிவடைந்து, வடகிழக்கு பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. குறைந்து வந்த அணையின் நீர்மட்டம் மழையால் 2 நாட்களில் 5 அடி உயர்ந்து இன்று காலை 6மணி நிலவரப்படி 137.80 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). பெரியாறில் 68மி.மீ., தேக்கடியில் 158.40 மி.மீ., மழை பதிவானது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 17828 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்ப் பிடிப்பில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் தமிழகப் பகுதிக்கு குடிநீர் மற்றும் சாகுபடிக்காக 1000 கன அடியாக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் 1683 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நீர் இருப்பு 6571.60 மில்லியன் கன அடியாகும். நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. நீர்மட்டம் அதிகரித்து வருவதால் தமிழகப் பகுதிக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள ஆற்றின் கரையோரப் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் ஆற்றில் குளிக்கவும், துணி துவைக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் காலை 8 மணிக்கு அணையில் உள்ள 13 ஷட்டர்கள் வழியாக 5000 கன அடி நீர் திறந்து விடப்படும் என்று தமிழ்நாடு நீர்வளத் துறையினர் அறிவித்துள்ளனர். இது குறித்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கேரளவில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.