தமிழக அரசுக்கு தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை….
ஒருவர் வீட்டில் இறந்துவிட்டால், அவரது இறப்புக்கான காரணத்தைக் கூறி, அதற்கான விண்ணப்பத்தில் சான்று அளித்தாலே உள்ளாட்சி அமைப்புகள் இறப்புச் சான்று வழங்கலாம். ஆனால், உள்ளாட்சி அமைப்பினர் மருத்துவர் சான்று கேட்பதால் இறப்புச் சான்று பெறுவதில் வாரிசுகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பெறுவது தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பை பதிவு செய்தால் மட்டுமே அரசு நிதியுதவி கிடைக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. சொத்துகளையும் எந்த வில்லங்கமும் இல்லாமல் வாரிசுகள் பத்திரப்பதிவு செய்துகொள்ள முடியும். அதனால், பொதுமக்கள் தற்போது இந்த சான்றிழை பெறுவதற்காக சிரத்தை எடுத்து விண்ணப்பிக்கின்றனர். ஒருவர் இறந்த 21 நாளில், அவரது இறப்பு சான்றிதழுக்காக உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
60_வயதுக்கு மேல் உள்ளவர்கள் இயற்கை மரணம் அடைந்தால் மருத்துவர் சான்றிதழ் ஏதுமின்றி அப்படியே பதிவு செய்வர். மருத்துவமனைகளில் இறந்தால் மருத்துவர்கள், மருத்துவச் சான்றை வழங்குவர். அதை வைத்து, உள்ளாட்சி அமைப்புகளில் இறப்புச் சான்று பெற்றுவிடலாம். ஆனால், 60 வயதுக்குக்கீழ் வீட்டில் இறந்தால் அதை உறுதிப்படுத்த மருத்துவர் சான்று கேட்கின்றனர். அதனால், வீட்டில் இறந்தால் இறப்புச் சான்று பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
ஒருவர் இறந்துவிட்டால் அவரது வாரிசுகள் இறப்புச் சான்றிதழை பெற்றால்தான் இறந்தவரின் பெயரில் உள்ள பட்டா, வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு இணைப்பு, அரசு உதவிகள் போன்றவற்றை பெற முடியும். அதனால், வாரிசுகளுக்கு இறப்புச் சான்றிதழ் முக்கியமான ஆவணம் ஆகும்.
பெரும்பாலும் வயதானவர்கள் வீட்டில் இயற்கை மரணமடைவார்கள். இவர்களுடைய இறப்புச் சான்றை பெறும்போது மருத்துவர் சான்று கேட்கிறார்கள். ஆனால், இறந்தவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது மருத்துவர்களுக்கு தெரியாததால் அவர்கள் கொடுக்க மாட்டார்கள்.
வயதானவர்கள் உண்மையிலேயே உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தால் கூட மருத்துவர் சான்று தேவை என்கிறார்கள். மருத்துவர்களிடம் சான்று கேட்டால், என்னிடம் சிகிச்சை பெறாததால் அவர் எப்படி இறந்தார் என தெரியாது என சான்று அளிக்க மறுக்கின்றனர்.
இதனால் இறப்பை பதிவு செய்ய முடியாமல் வாரிசுகள் தவிக்கும் நிலை உள்ளது. அதனால், இறப்புச் சான்று பெறும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்.
வீட்டில் இறந்தால் மருத்துவர்களிடம் சான்று வாங்குவது கட்டாயம் கிடையாது உரிய விசாரணை செய்து இறப்பை அலுவலர்கள் உறுதி செய்து இறப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் இறந்தால், இயல்பாகவே அவர்கள் எப்படி இறந்தனர் என மருத்துவர் சான்றை வழங்கி விடுவர்.
வீட்டில் இறந்தால் அவர் இயற்கையாக இறந்ததாக வாரிசுகள், உறவினர்கள் எழுதிக் கொடுத்தாலே போதும். அதற்காக தனிச் சான்று உள்ளது. அந்த சான்றுகளை உள்ளாட்சி அமைப்புகள் கொடுப்பதில்லை. ஆதரவற்றவர்களுக்கு விஏஓ, அந்தப் பகுதி பள்ளித் தலைமை ஆசிரியர், காவல்துறை உதவி ஆய்வாளர் ஆகியோர் கொடுக்கலாம் ஆனால் அவர்களும் சிக்கலில் மாற்றி விடுவோம் என சான்று கொடுப்பதில்லை*
ஒருவர் வீட்டில் இயல்பாகவே இறக்கலாம். தற்கொலை, கொலை போன்ற பல சர்ச்சைகளில் கூட இறக்க வாய்ப்புள்ளது. அதற்கு மருத்துவர்கள் சான்று அளித்தால், அந்த மரணங்கள் வழக்காகும்போது மருத்துவர்களும் சேர்ந்து குற்றவாளி ஆக்கப்படுவர். அதனால், இறப்பை பார்க்காமல் இறப்புக்கான சான்றிதழை, மருத்துவர்கள் கொடுக்க மாட்டார்கள் என மருத்துவ அதிகாரிகளும் கூறுகின்றனர்.
இயல்பாக ஒருவர் வீட்டில் இறந்தால் அவரது வாரிசுகள் இறப்பு சான்றிதழை எளிமையாக பெற அரசு உடனடியாக பிறப்பு இறப்பு அலுவலர்கள் மூலம் ஒரு குழு அமைத்து இறந்தவர் சந்தேக மரணமா, இயற்கை மரணமா என கண்டறிந்து இயற்கை மரணம் எனில் மருத்துவச் சான்று கேட்டு வாரிசுகளை அலைக்கழிக்காமல் உடனடியாக இறப்பு சான்றிதழ் வழங்க அரசு சிறப்பு உத்தரவை பிறப்பிக்க தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என
தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தலைவர் வை தினகரன் அவரது அறிக்கையில் தமிழக அரசுக்கு கோரிக்கை.