இணையும் கரங்கள்
அதிர்ச்சியில் ஸ்டாலின்
வாக்கிங் தொடங்கியதும் பாண்டியனுக்கு கை கொடுத்து பேசத் தொடங்கினார் சண்முகம்.
“என்ன மிஸ்டர் பாண்டியன்… கரூர் விவகாரம் அரசியல் களத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி வரும் என போன இதழ் அரசியல் டுடேவுக்காக வாக்கிங் போகும்போது நாம் பேசியிருந்தோம்.
இப்போது ஒவ்வொன்றாய் நடக்கிறது பார்த்தீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு பாண்டியன் பதிலளிக்க தொடங்கினார்.
“ஆமாம் ஆமாம்… எப்படி வரலாற்றை கி.மு- கி.பி. என பிரிப்பார்களோ அதே போல 2026 சட்டமன்ற தேர்தல் க. மு. மற்றும் க. பி. அதாவது கரூர் சம்பவத்துக்கு முன் கரூர் சம்பவத்திற்கு பின் என இரண்டாக பிரித்துப் பார்க்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடந்த விஜயின் பரப்பரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதை அடிப்படையாக வைத்து தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கட்சியின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த், கட்சியின் மற்றொரு மாநில நிர்வாகி நிர்மல் குமார் மற்றும் பலர் மீது கரூர் போலீசார் வழக்கு தொடுத்தனர்.
கரூர் மாவட்ட செயலாளர் கைது செய்து விட்டனர். மற்ற இரு நிர்வாகிகளும் முன் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்ற வரை சட்ட போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதன் தலைவர் விஜய் ஆகியோர்தான் கரூர் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்று திமுக அரசின் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம், முன்னாள் உள்துறை செயலாளரும் தற்போதைய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளருமான அமுதா ஐஏஎஸ், கரூர் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் விரிவான பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்கள்.
அது மட்டுமல்ல அரசியல் ரீதியாக கனிமொழி, ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி விஜய் தான் காரணம் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள்.
இது போதாது என்று திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒவ்வொருவராக தனித்தனியாக கரூருக்கு சென்று அங்கே பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி அவர்களுக்கு தனித்தனியாக நிவாரண உதவிகளையும் வழங்கினார்கள்.
இதற்கிடையில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு அதுவும் விசாரணையை தொடங்கிவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் விசாரித்து வருகிறது.
அரசியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது திமுக கூட்டுப் பாய்ச்சல் நடத்தி வருகிற நிலையில்… தனது அனுபவமின்மை காரணமாக விஜய்யால் இதை எதிர் கொள்ள முடியவில்லை.
அவரது கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வெளியே வந்து பேட்டி கொடுப்பதற்கே 10 நாள் ஆகிவிட்டது.
இதற்கிடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் தன்னுடைய தேர்தல் சுற்றுப்பயணங்களில் தொடர்ந்து கரூர் விவகாரம் பற்றி காரசாரகமாக அரசை கண்டித்து பேசி வருகிறார்.
41 உயிர்கள் இழந்ததற்கு அரசின் நிர்வாக அலட்சியமும் பாதுகாப்புக்கு குறைபாடும் தான் காரணம் என்றும் இதற்கு வேறு யாரையும் குற்றம் சொல்லி அரசு தப்பிக்க கூடாது என்றும் தொடர்ந்து அவர் உரையாற்றி வருகிறார். மேலும் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துவரும் நிலையில், அந்த விசாரணையின் போக்கை அரசாங்கமே தீர்மானிப்பது போல அரசாங்கத்தின் உயரதிகாரிகள் விரிவான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவது என்ன நியாயம் என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமல்ல மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா போன்றவர்கள் திமுகவின் ஊது குழலாக இருக்க வேண்டாம் என்றும் அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக எச்சரித்தார்.
இப்படி அரசியல் அனுபவம் இல்லாத ஒன்றை வயது குழந்தையான தமிழக வெற்றி கழகத்திற்காக, ஆட்சி அதிகாரத்திலும் மக்கள் மன்றத்திலும் நீண்ட அனுபவம் கொண்ட அதிமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. கரூர் விவகாரத்தில் தவெக வின் கோரிக்கையான சிபிஐ விசாரணையைதான் அதிமுகவும், பாஜகவும் அழுத்தமாக வலியுறுத்துகின்றன. தமிழக போலீஸார் மீதே சந்தேகம் இருக்கும்போது எப்படி அவர்களே விசாரிப்பது சரியாக இருக்கும், எனவேதான் சிபிஐ விசாரணையை மக்கள் கேட்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து வலியுறுத்துகிறார்.
விஜய் வெளியிட்ட வீடியோவில் கூட தனக்காக தன் கட்சிக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் அக்டோபர் 8 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகரில் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார்.
அவரோடு பாஜகவின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சர்ருமான தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர்.
அந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும்போது வலிமையான கூட்டணி அமையும் என்று பேசினார்.
அப்போது கூட்டத்துக்கு நடுவில் இருந்து தமிழக வெற்றிக்கழக கட்சியின் கொடிகள் ஆட்டப்பட்டன. ஏற்கனவே தர்மபுரி எடப்பாடி பிரச்சார பயணத்திலும் தமிழக வெற்றிக்கழக கொடிகள் தென்பட்டன.
இந்நிலையில் குமாரபாளையத்தில் தமிழக வெற்றி கழக கட்சியின் கொடிகள் தனது பிரச்சார கூட்டத்தில் பறப்பதை பார்த்த எடப்பாடி பழனிசாமி உடனடியாக அதற்கு ரியாக்ட் செய்தார்.
’பாத்தீங்களா கொடி பறக்குது… பிள்ளையார் சுழி போட்டாச்சு’ என்று ஆரவாரமாக எடப்பாடி பழனிசாமி பேச அதை கூடியிருந்த கூட்டம் ஏற்றுக்கொண்டு ஆர்ப்பரித்தது.
இதிலிருந்து அதிமுக- தவெக கூட்டணி அமையப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்கிறார்கள். அரசியல் பார்வையாளர்கள்” என்றார் பாண்டியன்.
தொடர்ந்து பேசிய சண்முகம், “எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான வேலுமணி, தங்கமணி, உதயகுமார், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் பலரும்… ’இப்போதைய நிலையில் நம்மோடு விஜய் வந்து சேர்ந்தால் அசைக்க முடியாத வெற்றியை நாம் பெற்று விடுவோம். 2011 ஆம் ஆண்டு எவ்வாறு விஜயகாந்த் நம்மோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றாரோ… அதேபோல 2026 இல் விஜய் நம்மோடு கூட்டணி அமைத்தால் திமுக எதிர்கட்சியாக கூட வராது. எனவே கரூர் சம்பவத்திற்கு பிறகான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு நாம் விஜயை கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்’ என்று ஆலோசனைகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே விஜய்யோடு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் மூலமாக பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. இடையில் பாஜக கூட்டணி ஏற்பட்ட பின்பு அது அப்படியே விடப்பட்டது.
இந்த நிலையில் இப்போதைய அரசியல் சூழலில் கரூர் சம்பவத்தை வைத்து தன்னை அரசியல் அரங்கத்திலிருந்து முற்றிலுமாக அகற்ற திமுக கடுமையான முயற்சி செய்து வருவதை விஜய் அறிந்துள்ளார். அதனால்தான் அவர் மிகவும் கவனமாக காய் நகர்த்தி வருகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் டெல்லி தலைவர்களும் விஜய்யோடு தொடர்பில் இருக்கிறார்கள். ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜயுடன் தொடர்பு கொண்டு இப்போதைய அரசியல் சூழலில் தமிழ்நாட்டில் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே உங்களுக்கு எதிர்கால சாதகங்களைத் தரும். எனவே நீண்ட கால பலன்களை கருத்தில் கொண்டு 2026 சட்டமன்ற த் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியோடு நீங்கள் இணைய வேண்டும் என்று விஜய்க்கு ஆலோசனை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
அதே நேரம் குமாரபாளையம் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுகவினரே தமிழக வெற்றி கழக கொடிகளை உயர்த்தி காட்டியதாகவும் சில வீடியோக்கள் பரவி வருகின்றன. எப்படி இருந்தாலும் அதிமுக-தவெக கூட்டணி இயற்கையாகவே உண்டாகிவிடும் என்பதுதான் இன்றைய அரசியல் களம் சொல்லும் செய்தியாக இருக்கிறது” என சண்முகம் பேசி முடிக்க, பாண்டியனும் அவரும் அருகம் புல் ஜூஸ் குடித்தபடியே வாக்கிங்கை முடித்தனர்.
பாக்ஸ்
ஜி.டி.நாயுடு பெயர் மாற்றமா? வேலு பதில்!
கோவையில் ஜி டி நாயுடு பெயரில் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இது பற்றி நமது அரசியல் டுடே இதழில் விரிவாக செய்தி வெளிவந்திருக்கிறது.
கொங்கு மண்டலத்தில் கவுண்டர்கள் திமுக பக்கம் இல்லை என்பதால் நாயுடுக்கலை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. அதேநேரம் சாதி பெயரை தெருக்கள் சாலைகள் இருந்து அகற்ற வேண்டும் என தலைமைச் செயலாளர் அரசாணை வெளியிட்ட நிலையில் அமைச்சர் இப்படி அறிவித்திருப்பது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
இது பற்றி அக்டோபர் 9ஆம் தேதி கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, ‘ஜிடி நாயுடு என்பது நூறாண்டுகளுக்கு முன்பே அவருக்கு வழங்கப்பட்ட பெயர். அப்படித்தான் இங்கே அவர் அழைக்கப்படுகிறார். அதனால்தான் அந்த பெயர் வைத்தோமே தவிர வேறொரு காரணமும் இல்லை. முதலமைச்சர் இடம் பேசி அவர்களது குடும்பத்தினரிடம் ஆலோசித்து இது பற்றி முடிவெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்” என்கிறார்.
பணிகளில் தொய்வு: ஐபியை அதிரவைத்த உதயநிதி
துணை முதல்வர் உதயநிதி மாவட்டம் தோறும் அரசுத் திட்டங்கள் பற்றிய ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் அக்டோபர் 8 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட ஆய்வுக் கூட்டத்தைக் கூட்டினார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 52 துறைகளின் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நான், அமைச்சர் ஐ பெரியசாமி மற்றும் சக்கரபாணி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் சிறப்புத்திட்ட செயல் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர் அனைத்து அரசு ஊழியர்களும் இணைந்து இந்த ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம்.
பல்வேறு திட்டங்களில் திண்டுக்கல் மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், சில பணிகளில் தொய்வு இருப்பதை கண்டறிந்துள்ளோம். இதனை எப்படி விரிவு படுத்த வேண்டும் என்று நானும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் குறிப்பிட்டு இருக்கிறோம். சில பணிகள் குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறியுள்ளோம்” என்றார்.
வெளியே இவ்வாறு சாஃப்டாக சொன்னாலும் ஆய்வுக் கூட்டத்தில் தொய்வாக இருக்கும் பணிகளை குறிப்பிட்டு மிகக் கடுமையாக பேசினாராம் துணை முதல்வர்.
“நான் பார்த்து வளந்த சின்னவரு என்னை இந்த விரட்டு விரட்டுறாப்லயே…” என்று நொந்துகொண்டாராம் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி.
