• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சரக்குகளை கையாளும் கார்கோ சேவை தடைபடுகிறது-துரை வைகோ..,

Byரீகன்

Oct 10, 2025

திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் துரை வைகோ திருச்சி பன்னாட்டு விமான முனையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
திருச்சி விமான முனையத்தின் ஆலோசனைக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. விமான பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவது, விமான சேவையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

கடந்த 2024 ஆம் ஆண்டு புதிய விமான முனையம் தொடங்கப்பட்டது. விமான முனையத்தின் ஓடுதளம் விரிவாக்கம் செய்வதற்கான பணிகளுக்காக 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. மேலும் 10 விழுக்காடு நிலத்தை கையகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கு நீர்வளத்துறை உள்ளிட்ட சில துறையினரின் அனுமதி தேவைப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோரிடம் இதுகுறித்து எடுத்துரைத்துள்ளேன். நிலத்தை கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்படும். அதில் 11 ஏக்கர் பட்டா நிலமாக உள்ளது. மீதமுள்ள 40 ஏக்கர் நிலத்திற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் அனுமதி கொடுக்க வேண்டி உள்ளது.
விமான ஓடுதளம் விரிவாக்கம் செய்யும் பணியில் எவ்வித தடையும் இல்லை. பிரதமர் மோடி திருச்சி விமான முனையத்திற்கு ஒரு பெரிய விமானத்தில் வந்த இறங்கினார். பெரிய விமானம் திருச்சிக்கு வந்தது அதுவே முதல்முறை. அப்போதே பெரிய விமானங்கள் திருச்சி விமான நிலையம் வந்து செல்ல ஏதுவானதாக நம் விமான நிலையம் இருப்பதை உணர்ந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
இமிகிரேஷன் சோதனையை முடித்துவிட்டு சில வினாடிகளில் பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கான முறை சென்னையில் உள்ளது. அது போன்ற ஒரு முறையை திருச்சியில் தொடங்கி வைத்துள்ளோம்.
டிரான்சிஸ் ஹப் ஆக திருச்சியை மாற்ற வேண்டி உள்ளது. அதற்கான கோரிக்கையை மத்திய விமானத்துறை அமைச்சரிடம் முன் வைத்துள்ளோம்.

இஸ்லாமிய பயணிகளுக்காக, விமான முனையத்தில் வருகை, புறப்பாடு உள்ளிட்ட மூன்று இடங்களில் வழிபாடு செய்வதற்கான தனி இடத்தை ஒதுக்கி உள்ளோம். விமான முனையத்தில் உணவகம், மருந்தகம் விரைவில் திறக்கப்படும்.
விமான முனையத்திற்குள் வாகன நெரிசலை குறைப்பதற்கு மூன்று சோதனை சாவடிகள் செயல்பாட்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். Fas tag முறையை அமுல்படுத்தவும் ஆலோசித்து வருகிறோம்.

ஹைதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு விமான சேவையை அதிகப்படுத்தவும், வெளிநாடுகளுக்கான விமான சேவையை கூடுதலாக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், சரக்குகளை கையாளும் கார்கோ சேவை தடைபடுகிறது. இதனை சரி செய்யவும் ஆலோசித்துள்ளோம். சரக்குகளை தனியாக கையாளுவதற்கு தேவையான விமானங்களை இயக்கவும் ஆலோசிக்கப்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட திருச்சி புதிய விமான முனையத்தை 25 விழுக்காடு மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். அதனை முழுமையாக பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டது. திருச்சியில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது. விமான போக்குவரத்தை கண்காணித்து வழிகாட்டும் ஏடிசி டவர் 46 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை என்பதால், இதனை 75 மீட்டர் உயரத்திற்கு உயர்த்திக் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தும் இடம் தொடர்பான ஒப்புதல் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்கு தடையின்மை சான்று கேட்டுள்ளோம்.

விரைவில் ஜி கார்னர் பகுதியில் பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலை அமைப்பதற்கு 618 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஏற்கனவே நிதி நிலை போதுமானதாக இல்லாத நிலையில் சர்வீஸ் சாலைக்கு 618 கோடி ரூபாய் செலவு செய்வது இயலாத காரியம். தமிழக அரசு 84 கோடி ஒதுக்கி உள்ளது. கூடுதல் தொகைக்கு மத்திய அரசு நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். அதேபோல் திருச்சியில் மெட்ரோ அமைத்ததற்கு வாய்ப்புகள் குறைவு என்றே கருதுகிறேன்.

திருச்சி அரிஸ்டோ மற்றும் மாரிஸ் மேம்பாலம் விரைவில் முழுமை பெறும்.
பொன்மலை மஞ்சள் திடல் சப்வே விரைந்து முடிக்கப்படும், பொன்மலை ரயில்வே குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுப் போக்குவரத்து சாலைகள் மிகுந்த சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளீர்கள் அவற்றை முழுமையாக ஆராய்ந்து விரைவில் சாலைகளை செப்பனிட தேவையானவற்றை செய்கிறேன் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மதிமுக முக்கிய நிர்வாகிகள் வெல்லமண்டி சோமு, டாக்டர் ரொகையா, மணவை தமிழ்மாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.