மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பங்களிப்புடன் “மாமதுரை – இயற்கை மதுரை” என்ற கருப்பொருளில் இயற்கை பஜார் அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானம் மாநாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. இக்கண்காட்சியின் நோக்கம் பொதுமக்களிடையே இயற்கை உணவுப் பொருட்கள், பாரம்பரிய விவசாயம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இக்கண்காட்சியில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டு நெய், ரசாயனம் இல்லாத மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள், பனை ஓலை மற்றும் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள், பாரம்பரிய நெல் மற்றும் தானிய விதைகள், விவசாய கருவிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மஞ்சள், மல்லி, சிறுதானிய கேக், லட்டு, ஊறுகாய், கருவாடு, ஆர்கானிக் ஐஸ்கிரீம், சுண்டல், உள்ளிட்ட பல்வேறு இயற்கை தயாரிப்புகளும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. மொத்தம் 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் விவசாயிகள் தங்களின் இயற்கை விளைபொருட்கள் மற்றும் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவுள்ளனர்.
இந்த மாமதுரை – இயற்கை மதுரை பஜாரினை அக்டோபர் 11 அன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் துவக்கி வைக்க உள்ளார்கள்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. ஜே. பிரவீன் குமார், “இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ள ரூ.50/-, ரூ.100/- மதிப்புடைய கூப்பன்களை தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றுக்கொண்டு இயற்கை பஜாரில் உள்ள அரங்குகளில் கூப்பன்களை வழங்கி பொருட்களை பெற்றுக்கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்” என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னுதாரமாக அச்சிடப்பட்டுள்ள ரூ.1000/- மதிப்பிலான கூப்பன்களை பெற்றுக் கொண்டார். பொதுமக்களும் இந்த இயற்கை பஜாரில் கலந்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் இந்த முயற்சியில் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.