கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இன்று அப்பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மற்றும் எம்.பிக்கள் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள உயிரிழந்த குழந்தை குரு விஷ்ணு இல்லத்தில் இரங்கல் உறவினர்களை சந்தித்து இரங்கல் தெரிவித்தனர்.
அப்போது குழந்தையின் புகைப்படத்தை காண்பித்து உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர். உறவினர்கள் கைகளை பற்றி கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி ஆறுதல் தெரிவித்தார்.
விஜய் பாட்டு எந்த திசையில் கேட்டாலும் அதை பார்த்து குழந்தை ஆடுவான். இவ்வளவு பெரிய நடிகர் வீட்டுக்கு அருகிலேயே வருகிறார் என்று தெரிந்ததால் தான், குழந்தையை தூக்கிக் கொண்டு அங்கு சென்றோம். இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கு போயிருக்க மாட்டோம்.

குழந்தையின் அம்மாவால் வாய் பேச முடியாது, காது கேட்காது. குழந்தையின் அத்தையான நான்தான், அந்த கூட்டத்திற்கு எடுத்துச் சென்றேன். சாகும் வரை இந்த குற்ற உணர்ச்சி என்னை தூங்க விடாது.
அருகில் வண்டி ஒன்று இருந்தது. அந்த வண்டி இல்லை என்றால் நானும் இறந்திருப்பேன்.
அழுது அழுது கண்ணில் கண்ணீர் வரவில்லை. மனசு மரத்துப் போய்விட்டது. தாய்க்கு கூட பதில் சொல்லி விடுவேன். ஆனால், குழந்தையின் அப்பாவான என் உடன் பிறந்த தம்பிக்கு எப்படி பதில் சொல்லப் போகிறேன் என்று தெரியவில்லை என்றார்.

அப்போது உறவினர்கள் கைகளைப் பற்றிக் கொண்டு ஆறுதல் தெரிவித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி உள்ளிட்டோர் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உதவி செய்ய விருப்பப்படுவதாக தெரிவித்ததோடு, தொலைபேசி எண்ணை வாங்கிச் சென்றனர்.