சிவகங்கை தொல்நடைக் குழுவினர் தொல் நடைப் பயணம் எட்டில் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு தொல்நடைப் பயணம் மேற்கொண்டனர்.
இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் காளிராசா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

சிவகங்கை தொல்நடைக் குழுவினர் பொதுமக்களிடத்தும் மாணவர்களிடத்தும் தொன்மையை வெளிப்படுத்தி அதன் சிறப்பை அறியச் செய்தல் அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பாதுகாத்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
தொல்லியல் எச்சங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்துவதுடன், சிவகங்கை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள தொல்லியல் தலங்களுக்கு தொல்நடைப் பயணமாக பொதுமக்களையும் குழந்தைகளையும் அழைத்துச் சென்று பார்வையிடச்செய்து அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி அனைவரையும் அறியச் செய்து வருகின்றனர்.
அவ்வகையில் எட்டாவது தொல்நடைப் பயணமாக சிவகங்கை மாவட்டம் பிரான்மலை மற்றும் பூலாங்குறிச்சிக்கு சென்றனர்.

சிவகங்கையில் தொடங்கியை இப்பயணத்தை பணி நிறைவு பெற்ற கூட்டுறவுத் துறை சார்பதிவாளர் சுரேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இப்பயணத்திற்கான தொல்லியல் கையேட்டை செயலர் இரா.நரசிம்மன் வெளியிட ஆய்வாளர் காளீஸ்வரன் எழுத்தாளர் மகாபிரபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
பிரான்மலை.
பாரி ஆண்ட பறம்பு மலை சங்க இலக்கியம் மற்றும் வேள்பாரி நாவல் சிறப்பமிக்க பிரான் மலை 2500 அடி உயரமுள்ள இம்மலையேறி அங்குள்ள சுனைகள், பீரங்கி மேடு, மலையாண்டி கோவில், சேக் ஒலியுலா தர்கா போன்ற இடங்களைப் பார்வையிட்டனர்.
திருக்கொடுங்குன்றம்.

பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்கள் பதினான்கனுள்
ஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும் குன்றக்குடி ஆதீனக் கோவில் ஐந்தனுள் ஒன்றாகவும் மலைக்கீழ், நடுமலை, மேல்மலை என மூன்று பகுதியாக அமைந்துள்ள சிவன் கோவிலில் வடுக பைரவர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களை வணங்கி மகிழ்ந்தனர்.
குடைவரைக் கோவில் மற்றும் கல்வெட்டுகள்.
இக்கோவிலில் உள்ள நிவந்தம்,நிலதானம் போன்ற செய்திகளை உள்ளடக்கிய 13ம் நூற்றாண்டு பாண்டியர் காலக் கல்வெட்டுகளை பார்வையிட்டனர்.
பாண்டிய நாட்டில் உள்ள குடைவரைக் கோவில்களில் உயரமான இடத்தில் பெரிய அளவில் சிலைகளைக் கொண்ட மங்கையொரு பாகர் தேனம்மை ஏழாம் நூற்றாண்டு குடைவரையைக் கண்டு வியந்தனர்.
பூலாங்குறிச்சி கல்வெட்டுகள்.

தமிழக வரலாற்றில் இருண்ட காலம் என அழைக்கப்பட்ட கி. பி மூன்றில் இருந்து ஆறு வரை உள்ள காலத்தில் அது இருண்ட காலம் இல்லை அதுவும் மற்ற காலங்களைப் போல அரசர் ஆட்சியில் இயல்பான காலமே என உலகிற்கு வெளிப்படுத்திய பூலாங்குறிச்சி பச்செரிச்சல் மலை கி.பி ஐந்தாம் நூற்றாண்டு கல்வெட்டு,வட்ட எழுத்து வளர்ச்சி நிலை மற்றும் கல்வெட்டுகளில் அரிதாக புள்ளிகளை உடைய மெய்யெழுத்துகளை கொண்ட கல்வெட்டுகளை பார்வையிட்டனர். மேலும் இக்கல்வெட்டுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றும் வைத்தனர். அதாவது இக்கல்வெட்டுகளை தமிழக தொல்லியல் துறை பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்திருந்தாலும் இன்னும் போதுமான பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. கல்வெட்டு வெட்டப்பட்டுள்ள பாறைச் சரிவை ஒட்டிய பகுதியில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன விவசாயப் பணி மேற்கொள்ளப் பெற்றுள்ள வயலில் இறங்கியே இக் கல்வெட்டை பார்க்க முடிகிறது, இல்லையாயின் கல்வெட்டுகள் எழுதப்பட்டுள்ள மலைச்சரிவு பாறைப் பகுதியில் நின்றே இக்கல்வெட்டை பார்க்க முடிகிறது. ஆகவே இக்கல்வெட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கையும் வைத்தனர்.