பயணிகள் ரயில்களில் சிறிய சிறிய சரக்கு பார்சல்கள் அனுப்பலாம். இதற்காக ரயில்களின் முன்பகுதியிலும் பின் பகுதியிலும் பயணிகள் பெட்டிகளுடன் கூடிய சரக்கு வேன்கள் இணைக்கப்படுகிறது.
தற்போது இந்த சரக்கு வேன்கள் மின்னணு ஏல முறையில் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், முகவர்கள் ஆகியோருக்கு சரக்குகள் எடுத்து செல்ல அனுமதி வழங்கப்படுகின்றன. இது போன்ற அனுமதி ஏற்கனவே மதுரை – சென்னை வைகை எக்ஸ்பிரஸ், புதுடெல்லி சம்பர் கிராந்தி எக்ஸ்பிரஸ், மதுரை – கச்சக்குடா, மதுரை – சண்டிகர், போடிநாயக்கனூர் – சென்னை, திருநெல்வேலி – தாதர், திருநெல்வேலி – ஜாம்நகர், ராமேஸ்வரம் புவனேஸ்வர் ராமேஸ்வரம் – பெரோஸ்பூர் ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் மாங்காய், நெல்லிக்காய், எலுமிச்சை பழம், மீன், உணவுப் பொருட்கள், ரப்பர் தயாரிப்புகள், இருசக்கர வாகனங்கள், வீட்டு உபயோக சாமான்கள், வெற்றிலை, கடல்பாசிகள், முட்டைகள், ஏலக்காய் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது மதுரை சென்னை – பாண்டியன் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் – அயோத்தியா ரயில், திருநெல்வேலி – காந்திதாம் ரயில், தூத்துக்குடி – ஓஹா ரயில், ராமேஸ்வரம் புவனேஸ்வர் ரயில், திருநெல்வேலி – பிலாஸ்பூர் ரயில், திருநெல்வேலி – ஜம்மு ஸ்ரீ மாதா வைஷ்ண தேவி கட்ரா ரயில் ஆகியவற்றில் உள்ள பார்சல் வேன்கள் மின்னணு முறையில் ஏலம் விடப்படுகிறது. திருநெல்வேலி – ஜம்மு ஸ்ரீ மாதா வைஷ்ண தேவி கட்ரா ரயிலுக்கு 24 டன் கொள்ளளவு கொண்ட பெரிய பார்சல் வேனும், மற்ற ரயில்களில் பயணிகள் பெட்டியுடன் கூடிய 3.9 டன் கொள்ளளவு கொண்ட சரக்கு வேன்களுக்கும் மின்னணு ஏல முறையில் அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
இந்த மின்னணு ஏலம் www.ireps.gov.in என்ற இணையதளம் வாயிலாக செப்டம்பர் 25 அன்று காலை 11.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு www.ireps.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
நிலச்சரிவின் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் சாலைப்போக்குவரத்து தடைபட்டதால் பெருமளவில் தேங்கிய அழுகும் பொருளான ஆப்பிள் பழங்கள் பயணிகள் ரயில் பார்சல் வேன்கள் மூலம் அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.