தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் சொந்த தொகுதியான மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 22 வது வார்டு பகுதியான மதுரை தத்தனேரி பிரதான சாலையில் உள்ள பாரதிநகர், அசோக் நகர், மேற்கு குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக தொடர்ந்து கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கின்றது.

இதனால் அந்தப் பகுதியில் உள்ள மழலையர் பள்ளிக்கு செல்லக்கூடிய பள்ளி குழந்தைகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள பெண்கள், முதியவர்கள் நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வரும் நிலையில் கழிவுநீர் தேங்கி நிற்பது தொடர்பாக மதுரை மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அதிகாரிகள் அப்பகுதி பெண்களை ஒருமையில் இழிவாக பேசி அனுப்புவதாகவும் தங்களது பகுதியில் கழிவுநீர் தேங்கி இருப்பதை கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தியும் நிரந்தர தீர்வு இல்லாததால் நாள்தோறும் குழந்தைகள் பெண்களுக்கு பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மதுரை தத்தனேரி பிரதான சாலை பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது மாநகராட்சிக்கு எதிராகவும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கூறியும் முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்
பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
இது குறித்து பேசிய அப்பகுதி பொதுமக்கள் :-

தங்கள் பகுதியில் கழிவு நீர் தெருக்களில் தேங்கியிருப்பதால் காய்ச்சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டுவருவதாகவும், இது குறித்து புகார் அளிக்கும் போது மாநகராட்சி அதிகாரிகள் ஒருமையில் பேசுவதாகவும், மேலும் தொடர்ந்து பல மாதங்களாக கழிவுநீர் தேங்கிய நிலையில் தங்கள் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினரை தேர்தல் நேரத்தில் பார்த்ததோடு சரி அதன் பின்பு பார்க்கவே இல்லை எனவும் தங்கள் பகுதியில் ஒவ்வொரு முறையும் மறியல் போராட்டம் நடத்தும் போது தான் அதிகாரிகள் வருகிறார்கள். உடனடியாக சரி செய்கிறார்கள் ஆனால் எந்த நிரந்தர தீர்வும் கிடைக்காத நிலை உள்ளதாகவும் தெரிவித்தனர்.