தலைமறைவாக உள்ள முன்னாள் கவுன்சிலரின் மனைவி, மகள் மற்றும் கார் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஆபாசமாக பேசி, கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சென்னை பள்ளிகரணையை சேர்ந்தவர் செந்தமிழ்(41), பள்ளிகரணையில் இவருக்கு சொந்தமான 200 சதுர அடியில் கீழே கடை கட்டி சிப்ஸ் கடைக்கு வாடகைக்கு விட்டுள்ளார், முதல் தளத்தில் கூரியருக்கு வாடகை விட்டுள்ளார், கட்டடத்தின் இரண்டாம் தளத்தில் மழைக்காலத்தில் பயன்படுத்துவதற்காக கழிவறை கட்டிடம் ஒன்றை கட்டி வந்துள்ளார்.
செந்தமிழ் இல்லாத நேரத்தில் புதிதாக கட்டி வந்த கழிவறை கட்டுமானத்தை சிலர் இடித்து அகற்றியுள்ளனர்.

இந்த தகவலறிந்து செந்தமிழ் நிகழ்விடத்திற்கு சென்ற போது, அங்கு இருந்த மறைந்த முன்னாள் கவுன்சிலர் ரங்கனின் மனைவி நீலா, மகள் சூர்யா, மருமகன் ஜெய், மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் செந்தமிழிடம் தகராறு செய்து சாதியின் பெயரை குறிப்பிட்டு ஆபாசமாக பேசி, இடத்தை விட்டு வெளியேறுமாறு மிரட்டி, கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசி சேதப்படுத்தினர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
செந்தமிழ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் பேரில் பள்ளிகரணை போலீஸார் வந்து விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், இடத்தை அபகரிக்க முயன்ற முன்னாள் கவுன்சிலர் ரங்கனின் மனைவி நீலா, மகள் சூர்யா, மருமகன் ஜெய், மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோர் மீது செந்தமிழ் பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,

புகாரின் பேரில் அவர்கள் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக பேசுவது, காயம் ஏற்படுத்துவது, அத்துமீறி நுழைவது, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தல், 296(b), 115(2), 329(4), 324(4), BNS உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து முன்னாள் கவுன்சிலரின் மருமகன் ஜெய் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள நீலா, சூர்யா, மற்றும் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.