கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அறிவு திருக்கோயிலில், மனைவி நல வேட்பு விழாவில் மலர் கனிகள் பரிமாறி அன்பை வெளிப்படுத்திய தம்பதிகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆனைமலை பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் திருக்கோவிலில் வேதாத்திரி மகரிஷியின் மனைவியார் லோகாம்பாளின் 111 ஆவது பிறந்த நாள் மனைவி நல வேட்பு விழாவாக ஆகஸ்டு 30 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
தமிழகத்திலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். அறிவுத் திருக்கோயில் அறங்காவலர் பச்சையப்பன் அவர்கள் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதியினர் அருட்காப்பு காந்த அலை பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மனைவிகளின் வலது கையில் கணவன்மார்கள் கையை வைத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு, மனைவிகளுக்கு கனி மற்றும் மலர்களை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினர்.
மேக் இந்தியா நிறுவனத் தலைவர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதல்வர் வெங்கடேஷ் பழனிச்சாமி, அறிவு திருக்கோயில் இணை நிர்வாக அறங்காவலர் சின்னச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக கவிஞர் ஜோ அருள் பிரகாஷ் மனைவியின் மாண்பை பற்றி பேசினார்.
அவர் பேசும்பொழுது, ”நிலத்தை பக்குவம் செய்வது வேளாண்மை. உள்ளத்தை பக்குவம் செய்வது இல்வாழ்க்கை. உங்கள் மனைவியுடன் நேரத்தை ஒதுக்கி அவரிடம் பேசுங்கள். உங்களுக்கு வருகின்ற துன்பங்கள் பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வுகளை அளிப்பார்.
பெற்றோர்களுக்கு செய்வது கடன். பிள்ளைகளுக்கு செய்வது கடமை. மனைவிக்கு செய்வது வழிபாடு.

இந்திய நாட்டின் மிகப்பெரிய வலிமையே குடும்ப அமைப்பு தான். மேன்மையும் உன்னதம்தான் அழகு என்று எப்பொழுது பெண்கள் உணருகின்றார்களோ அப்பொழுது அவர்கள் முழுமை அடைகிறார்கள்.
உடல், மூளை, மனம் எப்பொழுது நேர்கோட்டில் இருப்பதுதான் ஆரோக்கிய வாழ்க்கை. மனைவியை நேசியுங்கள். மனைவியை நேசிக்க பழகினால் இம்மண்ணை நேசிக்கும் குணம் தானாக வரும்” என்று பேசினார்.
இல்லறம் நல்லறமாக சிறக்க இதுபோன்ற விழாக்கள் தேவை.