அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் முகமது சுபேர், பிரிட்டிஷ் இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் லட்சுமி நாராயணன், சுடுமன் பொருட்கள் சேகரிப்பாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் பாளையக்காரர்கள் காசுகளில் கணபதி தலைப்பில் பேசுகையில், பாளையக்காரர்கள் வரலாற்றுக்கு நாணயங்கள் சான்றாக அமைகின்றன. மதுரை நாயக்கராக விளங்கிய விஸ்வநாத நாயக்கர் பழைய நாயங்கர முறையை தழுவி தனது நாட்டை 72 பாளையப்பட்டுக்களாக பிரித்து பாளையக்காரர்களின் பொறுப்புகளில் விட்டார். இதன் விளைவாக 16,17,18 ஆம் நூற்றாண்டுகளில் பாளையக்காரர்கள் தமிழக நிர்வாகத்தில் இடம்பெற்றனர்.
பாளையம் என்பது ஒரு படை நிலையாகும். நாயக்க மன்னருக்கு தேவைப்படும்போது படையை தந்து உதவினர். பாளையப்பட்டு வரி வசூலித்து பாளையங்களில் நிர்வாகத்திற்கு ஒரு பங்கும் பாளையக்காரர்கள் சொந்த செலவுக்கு ஒரு பங்கும் நாயக்கருக்கு ஒரு பங்கும் என்ற விகிதத்தில் வரி மூலமாக வருவாயை பகிர்ந்தனர். 17,18 ஆம் நூற்றாண்டுகளில் சிறுசிறு பாளையங்கள் உருவாகின. அவை பெரும்பாலும் திருநெல்வேலி மதுரை ராமநாதபுரம் தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் அமைந்தன. பண்டைய வருவாய் நிர்வாகிகளிடம் இருந்து ஜமீன்தார் என்று சொல் அறியப்படுகிறது.

ஜமீன்தார் என்பது பாரசீக மொழியில் இருந்து பெறப்பட்டதாகும் ஜமீன் என்றால் நிலம், தார் என்றால் உடையவர் எனப் பொருள் அதாவது நிலத்தை உடையவர் என பொருள்படும். அரசாங்கத்தின் பிரதிநிதியாக இருந்த ஜமீன்தார்கள் அரசாங்கத்தின் பொது வருவாய்களை தீர்மானிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர். ஆங்கிலேயர்கள் காலத்தில் பாளையக்காரர்கள் எல்லாரும் ஜமீன்தார் ஆனார்கள். ஜமீன்தார்களும் சுதந்திரமாக இருந்து காசுகளை வெளியிட்டுள்ளனர். அந்த காசுகள் அனைத்தும் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மட்டும் புழக்கத்தில் இருந்துள்ளன. ஜமீன் எல்லைக்குள் கிராமங்களில் நெல் அறுவடை செய்வது வரிவசூல் செய்வது காவல் வேலை உள்ளிட்ட பல பணிகளை ஜமீன்கள் செய்து வந்தனர்.
வரி வசூலித்து மன்னருக்கு கொடுத்தது போக மீதியை ஜமீன் அனுபவித்துக் கொண்டனர். அவ்வகையில் தமிழக பாளையக்காரர் பல காசுகளை வெளியிட்டுள்ளனர். அதில் தெய்வ உருவங்களும் இடம் பெற்று உள்ளன.பழனி பாளையக்காரர் காசுகளில் மயில், கணபதி, வேல், வாள், கத்தி, குத்துவாள் போன்ற உருவ பொறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அதில் செம்பு உலோகத்தில் 2.4 கிராம் எடையில் காசின் முன்பக்கத்தில் கணபதி அமர்ந்த நிலையில் உள்ளார்.பின் பக்கத்தில் பழனி என்று இரண்டு வரிகளில் தமிழில் பெயர் உள்ளது.

மற்றொரு காசின் முன் பக்கத்தில் திருவாசிக்குள் கணபதி அமர்ந்த நிலையில் சுற்றிலும் பழனி என்று தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் திரிசூலம் உள்ளது. செம்பு உலோகத்திலான நாணயம் 2.2 கிராம் எடையுள்ளது என்றார்.