• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மீண்டும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பு குறைதீர் கூட்டங்கள்..!

Byவிஷா

Dec 11, 2021

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் மீண்டும் தொடங்கி நடத்தப்படும் என அரசு உறுதி அளித்துள்ளதாகத் தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் அறிவித்துள்ளது.


இதுகுறித்து அச்சங்கம் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை:
“மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் மாவட்டங்களில் மீண்டும் தொடங்கி நடத்தப்படும் எனத் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி உறுதி அளித்துள்ளார்.


மாவட்டங்களில் பல்வேறு துறைகள் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளைத் தீர்க்க கோட்ட அளவில் மாதந்தோறும் கோட்டாட்சியர் தலைமையிலும், மாவட்ட அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறை ஆட்சியர்கள் தலைமையிலும் சிறப்பு குறைதீர் கூட்டங்கள் 2018 முதல் நடத்தப்பட்டு வந்தன. கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சுமார் 2 ஆண்டுகளாக இக்கூட்டங்கள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், கீழ்மட்ட அதிகாரிகளால் தீர்க்கப்பட வேண்டிய அடையாளச் சான்று, உதவித்தொகை, நூறு நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் தீவிரமடைந்துள்ளன.


மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாநில அளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி தலைமையில் வெள்ளிக்கிழமை (நேற்று மாலை) சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. மாநில சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநர் டாக்டர் என். வெங்கடாச்சலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வருவாய் நிர்வாகத்துறை, இ-சேவைத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


மேற்கண்ட கோரிக்கை குறித்து அக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளி சங்கப் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு பதில் அளித்துப் பேசிய, மாநில வருவாய் நிர்வாக ஆணையர், பழையபடி மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டங்கள் உடனடியாகத் தொடங்கி நடத்தப்படும் எனத் தெரிவித்தார். மேலும், இக்கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் கரோனா விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


வங்கி சேவை முகவர்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை பட்டுவாடா செய்வதில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதை அரசு ஏற்கெனவே ஏற்றுக்கொண்டு, விருப்பப்படும் பயனாளிகள் நேரடியாகத் தொகையை எடுத்துக்கொள்ள ஏடிஎம் வசதி செய்து கொடுக்க வங்கிகளுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் அந்த உத்தரவைச் செயல்படுத்தாமல் வங்கிகள் அலட்சியம் செய்வதால் “அரசு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வங்கியில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும்” என வங்கிகளில் அனைவரும் பார்க்கும் வகையில் எழுதி வைக்க உத்தரவிடுமாறு வலியுறுத்தப்பட்டது.


அவ்வாறே செய்யுமாறு கூட்டத்தில் பங்கேற்ற மாநில அளவிலான வங்கிகள் ஒருங்கிணைப்பு அமைப்பு பிரதிநிதியிடம் வருவாய் நிர்வாக ஆணையர் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் நம்புராஜன், துணைத் தலைவர் பாரதி அண்ணா, செயலாளர் ஜீவா, தேசிய பார்வையற்றோர் இணைய திட்ட இயக்குநர் மனோகரன், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு தலைவர் சிம்மச்சந்திரன் உள்ளிட்ட டிச-3 இயக்க பொதுச் செயலாளர் அண்ணாமலை, பொருளாளர் வரதன், சரவணன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.”
இவ்வாறு தமிழக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.