அரியலூர்,ஆக. 10: அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் விதைத் திருவிழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, தமிழ்ப் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி.பாலகிருஷணன் தலைமை வகித்து சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா பங்கேற்று, சுற்றுச்சூழல் காக்க பொறுப்பு ஏற்கிறேன் என்ற கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு விதைத்திருவிழாவினை தொடக்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியை ஆசிரியர் ஆவாரை இராசேந்திரன் தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து, இயற்கை முறையில் விவசாயிகள் மேற்கொள்வோர், ஆசிரியர்கள், விவசாய ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர்.
இவ்விதை திருவிழாவில், பாரம்பரிய விதைகளான நீலப்புடலை உள்ளிட்ட காய்கறிவிதைகள், மூலிகைகள், அரிசி வகைகளான மாப்பிள்ளை சம்பா, நவரா, குதிரைவாலி, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்டவைகளும், நவதானியங்களான கருப்பு கவுனி, சிவப்பு கவுனி, நவரா, வரகு, பனிவரகு, சாமை, தினை, நவதானியத்தில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், நாட்டு துவரை, நாட்டு பருத்தி விதைகள் மூன்று ஆண்டு விளைச்சல் தரும் கருங்கண்ணி உள்ளிட்டவை கீரை வகைகள், தேன், செம்புபாத்திரங்கள், இயற்கை முறையில் தயாரான வாசனைத் திரவியங்கள், சோப்பு வகைகள், மர செக்கில் தயாரான எண்ணெய் வகைகள், காய்கறி விதைகள், அபூர்வ வகை மரச்செடிகள், மற்றும் விதைகள்,நாட்டு வகை மாடுகள், கோழிகள், பஞ்சகாவ்யா, பூச்சி விரட்டிகள், நெகிழி தவிர்க்க துணிப்பைகள், பசுமை நூல்கள் ஆகியவை விற்பனைக்கு காட்சிபடுத்தியிருந்தனர்.
இந்த திருவிழாவை காணவந்த விவசாயிகள்,பாரம்பரிய விதைகள், இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள்,செடிகள் உள்ளிட்டவைகளை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். மேலும் இந்த திருவிழாவில் இயற்கை இடுப்பொருள்கள்,இயற்கை உணவு முறைகள், வீட்டு தோட்டம் அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டு, அவர்களுக்கு கம்பு, கேழ்வரகு கூல், மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், பள்ளி மாணவர்கள் 100 பேருக்கு தலா ரூ.20 மதிப்பில் வெண்டை, கொத்தவரை, பூசணி, கீரை உள்ளிட்ட விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் சிலம்பம், பேச்சு, பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக முனைவர் செங்கொடி வரவேற்றார்.இந்நிகழ்வில் மதிமுக மாவட்ட செயலாளர் க. இராமநாதன், அரியலூர் வடக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் கா. பி. சங்கர், இந்தியா செஞ்சிலுவை சங்கத்தின் முன்னாள் தலைவர் நல்லப்பன்,இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்களம் இளவரன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம், தமிழ்களம் அமைப்பு செய்திருந்தது.






; ?>)
; ?>)
; ?>)
