திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே கணவாய்ப்பட்டி கணவாய் கருப்பணசாமி கோயிலில் கோபால்பட்டி சுற்று வட்டார வாடகை கார் மற்றும் டிராவல்ஸ் வேன் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும் லாபகரமாகவும் இயங்குவதற்கு வேண்டுதல் வைத்து ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜைகள் செய்து ஆட்டு கிடாய்கள் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.

தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ஆட்டுக்கிடாய்g விருந்து அன்னதான விழாவில் கோபால்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் வாடகை கார் மற்றும் டிராவல்ஸ் வாகனங்கள வைத்திருப்போர் 100 க்கும் மேற்பட்ட கார் மற்றும் டிராவல்ஸ் வாகனங்களுடன் கணவாய் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து வாகனங்களுக்கு மாலைகள் மற்றும் சந்தனம் பூசி முதலில் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் தங்களது வாகனங்களின் சாவியை தாம்பாள தட்டில் வைத்து ஆளுயர மாலையுடன் ஊர்வலமாக வந்து கணவாய் கருப்பணசாமிக்கு ஆளுயர மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

தங்களது வாகனங்கள் விபத்தில்லாமலும், லாபகரமாகவும் இயங்க வேண்டி 20 க்கும் மேற்பட்ட கிடாய்கள், 100 க்கும் மேற்பட்ட கோழி வெட்டி பொதுமக்களுக்கு கறி விருந்து அன்னதானம் வழங்கினர்.
அன்னதான விழாவில் கோபால்பட்டி, கனவாய்ப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.