கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் தலைவர் திம்மம்பட்டி ஆறுச்சாமி கலந்துகொண்டு கரூர் மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்காக சுமார் 20 தூய்மை பணியாளர்களை புலியூர் பேரூராட்சி குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் அழைத்து வந்து நிகழ்ச்சியில் பங்குபெறச் செய்து, அதனை தொடர்ந்து அதே வாகனத்தில் அனைவரையும் ஏற்றி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக தூய்மைப் பணியாளர்கள் நல வாரிய தலைவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு குப்பை சேகரிக்கும் வாகனம் மூலம் அழைத்து வந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நலவாரிய தலைவர் கூட்டத்தில் பங்கேற்றபோது அனைவருக்கும் பணிநேரத்தில் சரியான முறையில் கை கவசம், கவச உடை சரியாக வழங்கப்படுகிறதா என்று கேட்டுள்ளார். ஆனால், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க தூய்மை பணியாளர்களுக்கு என்று தனியாக வாகனம் ஏற்பாடு செய்யாமல் இதுபோல குப்பை அள்ளும் வாகனத்தில் ஏற்றி சென்றது குறிப்பிடத்தக்கதாகும்.