கோவை, உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் பாலன், சாவித்திரி தூய்மை பணியாளர்கள் . இவர்களது 13 வயது மகள் சௌமியா கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து பாட்டி வீட்டிற்கு வந்த பிறகு அங்கு இருந்து ஆட்டோவில் செல்வதற்காக அறிவொளி நகர் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது எதிரே வந்த குட்டி யானை (எ) டாடா ஏசி ஆட்டோ மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த குழந்தையை இழுத்துக் கொண்டு சென்று கல்லில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்து அக்கம், பக்கத்தினர் பெரியகடை வீதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ ஓட்டுனர் உட்பட இருவரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜேந்திரன். அவரது நண்பர் ஓட்டுனர் உரிமம் இல்லாத கண்ணன் என்பவருக்கு ஆட்டோவை இயக்க கொடுத்து உள்ளார். இதனால் அந்த விபத்து ஏற்பட்டு சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது. இதை அடுத்து இருவர் மீது மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பள்ளிக்குச் சென்ற 13 வயது குழந்தை ஆட்டோ மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.