திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ஒருத்தட்டு கிராமத்தில் செண்டு மல்லி, ரோஸ் உள்ளிட்ட பூக்களை சாகுபடி செய்து வருபவர் விவசாயி நாகராஜன் (60) இவரது தோட்டத்தில் பயிரிட்டுள்ள பூக்கள் மற்றும் வாழை மரங்களுக்கு மத்தியில் கஞ்சா செடி செடிகளை ஊடுபயிராக விவசாயம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்தக் கஞ்சா செடிகள் சுமார் 6 அடி உயரம் வரை செழித்து வளர்ந்துள்ளது.
செண்டு மல்லி செடி போன்று இருந்ததால், அருகில் இருந்த மற்ற விவசாயிகளுக்கு அது கஞ்சா செடி என, சந்தேகம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், அந்த கஞ்சா செடி தற்போது சுமார் 6 அடி உயரத்திற்கு செழித்து மலர்ந்து இருந்ததால் சந்தேகம் அடைந்த சிலர், இதுகுறித்து அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் ஜெயபாண்டிக்கு ரகசிய தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற, சார்பு-ஆய்வாளர் தயாநிதி தலைமையிலான காவல்துறையினர் கஞ்சா பயிரிட்டு உள்ள விவசாயத் தோட்டத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தோட்டத்தில் கஞ்சா விவசாயத்தில் விவசாயி நாகராஜ் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட விவசாய நாகராஜ் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நாகராஜ் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், அவரிடமிருந்து கஞ்சா விதைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் கடந்த எவ்வளவு நாட்களாக கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார்? கஞ்சா விதைகளை எங்கு வாங்கினார்? கஞ்சா செடிகளை எங்கு விற்பனைக்கு அனுப்பினார்? விவசாயி மூலம் மற்ற ஏதேனும் விவசாயிகள் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருக்கிறார்களா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு அருகே விவசாயி ஒருவரது தோட்டத்தில் கஞ்சா விவசாயத்தில் ஈடுபட்டு அவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து கஞ்சா விதைகள் மற்றும் கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம், இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.