மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

அப்பர்,சம்பந்தர்,சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 7 ஆம் தேதி இரவு கோவில் வளாகத்தில் தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.
முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் எழுந்தருளினர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கோவில் குருக்கள் சீர்வரிசை எடுத்து வந்து மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
முன்னதாக மாலை மாற்றுதல் டிஸ்டி கழித்தல் உள்ளிட்ட சுவாரசியமான நிகழ்வுகளுடன் ஐதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.




