புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கோட்டகுப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னமுதலியார்சாவடி மீனவ கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் 250 படகுகளை கொண்டு ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி மீனவர்களின் படகுகளை நிறுத்தி வைக்க இட வசதி இல்லாத காரணத்தினால் சின்ன முதலியார் சாவடியை அடுத்துள்ள தந்திராயங்குப்பம் கிராமத்தில் படகுகள் நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் சின்ன முதலியார் சாவடியில் மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது குறித்து மீனவர்கள் கூறும்போது…
சின்னமுதலியார் சாவடி கடல் பகுதியில் தூண்டில் முள் வளைவு அமைக்காததால் இரு மீனவ கிராமங்களுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையும் உருவாகிறது. இதனை தீர்க்கும் வகையில் உடனடியாக சின்ன முதலியார்சாவடியில் தூண்டில் முள் வளைவு அமைத்தால் இயற்கையாகவே கரை உருவாகி படகுகள் நிறுத்துவதற்கு இடம் கிடைக்கும் என 20 ஆண்டுகளாய் மீனவர்கள் வைக்கும் கோரிக்கைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
இதற்காக 12.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் இதுவரை அரசாணை வெளியாகாத காரணத்தினால் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. எனவே உடனடியாக தூண்டில் வளைவாக அமைக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் கடல் இறங்கி போராட்டம் நடத்தப் போவதாகவும் ஆவணங்களை ஒப்படைக்க போவதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.