• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொதுமக்கள் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்காததே – உயிரிழப்புக்கு காரணம்

Byஜெ.துரை

Apr 21, 2025

திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என அமைச்சர் கே.என் நேரு கூறினார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் திருச்சி உறையூரில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக கூறி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கொண்டுவந்தார்.

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த உயிரிழப்புக்கு காரணம் என கூறினார்.

மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சையும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் முழு கட்டணத்தையும் ஏற்பதோடு, அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதே தீர்மானத்தின் மீது தவாக உறுப்பினர் வேல்முருகன், விசிக எஸ் எஸ் பாலாஜி, பாமக கோ.க. மணி என பல்வேறு உறுப்பினர்களும் பேசி அரசின் கவனத்தை ஈர்த்தனர்.

அதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு,

திருச்சி உறையூர் பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் கிடைத்தவுடன் உடனடியாக அப்பகுதியில் 287 பேர் கொண்ட சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு அப்பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை சிகிச்சை வழங்கியதாக கூறினார்.

10 கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு தொற்று நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டதாக கூறிய அவர்,

அங்கு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறினார்.

அப்பகுதியில் வெக்காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், அங்கு விநியோகிக்கப்படும் நீர் மோர் மற்றும் குளிர்பானங்கள் மூலமாகவே குழந்தை உட்பட நால்வருக்கு உடல்நலத் தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறிய அமைச்சர் கே என் நேரு, இறந்தவர்களின் உடற்கூராய்வு அறிக்கையிலும் அவை தெளிவாகியிருப்பதாகவும் பேசினார்.

தமிழகத்தில் மொத்தம் நாள் ஒன்றுக்கு ஐந்தரை கோடி மக்களுக்கு நான்காயிரம் எம் எல் டி அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்துவருவதாகவும், குடிநீரை பொறுத்தவரையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

எனவே திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு என்பது கழிவுநீரால் நிகழ்ந்தது அல்ல எனவும், அப்பகுதியில் விநியோகம் செய்யப்பட்ட நீர் மோர் மற்றும் குளிர்பானங்களால் நிகழ்ந்தது எனவும் அமைச்சர் கே என் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.