கமாலியா முஸ்லீம் ஜமாத்தார்கள் மற்றும் நாகப்பட்டினம் நகர திமுக சார்பில் நாகப்பட்டினம் பழந்தெருவில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும், திமுக மாவட்ட செயலாளருமான கௌதமன், மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உள்ளிட்டோர் கொண்டனர். நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், நாட்டின் கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் இஸ்லாமியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், பண்டைய தமிழகத்தில் இஸ்லாமியர்கள் வணிக ரீதியாக முக்கிய இடத்தை பிடித்துள்ளனர் என்றார். அதே போல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் இஸ்லாமியர்களின் பங்கு மிகவும் அளப்பரியது.
அதனால் தான் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிய அரசு பல சட்டங்களை இயற்றிய போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் முன்நின்று குரல் கொடுத்து வருகிறார் என்றார். வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய ஒரே முதல்வர் நமது மு.க.ஸ்டாலின் மட்டுமே என்ற அவர், சிறுபான்மையினர் ஊக்கத்தொகையை ஒன்றிய அரசு தர மறுத்தாலும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் ஆட்சி செய்யும் முதல்வர் ரூ.12 கோடிக்கு மேல் வழங்கியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக ஓயாது உழைக்கும் முதல்வருக்கு சிறப்பு துவா செய்ய வேண்டும்.