நாகை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக சார்பில் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பாகநிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

நகர செயலாளரும், நகர்மன்ற தலைவருமான மாரிமுத்து தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன் வரவேற்றார். பொருளாளர் லோகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், நகர அவைத்தலைவர் முருகையன், மாவட்ட பிரதிநிதி ரமணி, நகர துணை செயலாளர்கள் திலகர், சித்ரா, நகர பொருளாளர் அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும்,மாவட்ட செயலாளருமான கவுதமன் பேசியதாவது: பெண்கள் தினந்தோறும் இலவசமாக பஸ்சில் பயணம் செய்ய மகளிர் விடியல் பயணம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000, கல்லு£ரியில் படிக்கும் மாணவிகள் கல்வியை தொடர புதுமைப்பெண் திட்டம். மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பசியை போக்க காலைஉணவுத்திட்டம். உழைக்கும் பெண்கள் விடுதியில் தங்கிட தோழி மகளிர் விடுதி என திராவிட மாடல் அரசு சாதனைகளை செய்து வருகிறது.
ஆனால் ஒன்றிய அரசு இதை கண்டு பொறாமை அடைந்து கல்விக்கு தர வேண்டிய நிதியை கூட தரமறுக்கிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை கேட்டால் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறது. இந்திய நாட்டில் உள்ள எந்த மொழியை வேண்டும் என்றாலும் மூன்றாவது மொழியாக நாம் கற்றுகொள்ளலாம். ஆனால் இந்தியை தான் கற்றுகொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு இந்தியை திணிக்க பார்க்கிறது.

நாம் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் இல்லை. ஆனால் இதை தான் கற்க வேண்டும் என திணிப்பதை தான் எதிர்க்கிறோம். அதே போல் நிதி பகிர்வில் உரிய நீதியை தமிழகத்திற்கு மோடி அரசு தருவது இல்லை. நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டும் ஒன்றிய அரசு ஆளுநர் வாயிலாக திராவிட மாடல் அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. பட்டியல் இன மக்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இதை எல்லாம் தாண்டி தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் 8 தொகுதிகளை தமிழகம் இழக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை கண்டித்து முதல்வர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம். இப்படி தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்யும் ஒன்றிய அரசை மிகவும் துணிச்சலுடன் எதிர்த்து போராடி வரும் முதல்வருக்கு உறுதுணையாக நாம் இருக்க வேண்டும். இதற்கு வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளையும் கைப்பற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். நாகப்பட்டினம் தொகுதி தேர்தல் பார்வையாளர் அருட்செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர துணை செயலாளர் சிவா நன்றி கூறினார்.