மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 2020 போதை மாத்திரைகள் பறிமுதல் !!!
மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை கைது செய்து கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகரில் கஞ்சா ,குட்கா போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் மகாராஷ்டிராவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து கோவையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை செய்து வருவதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் வருவதாக தகவல் கிடைத்த நிலையில் போலீசார் கோவை ரயில் நிலையம் அருகே சோதனை மேல் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூன்று இளைஞர்களின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களின் உடமைகளை பெற்று சோதனை நடத்தினர். அதில் 2,020 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அதில் உக்கடத்தைச் சேர்ந்த முகமது தாரிக், சன்பர் ரஹ்மான், போத்தனூரைச் சேர்ந்த சாதிக் என்பதும் மூவரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மருந்து கடைகளில் போதை மாத்திரைகளை பெற்று கோவை வந்து ஆறு மாதங்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து பெற்று வந்தது தெரிய வந்தது. இதனைடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் மூவரிடமிருந்தும் 2020 போதை மாத்திரைகள் 3 செல்போன்கள் 3 ரயில் டிக்கெட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.