• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நான்கு திமுக கவுன்சிலர்கள் தனித்து செயல்பட முடிவு ?

ByKalamegam Viswanathan

Nov 3, 2024

சோழவந்தான் பேரூராட்சியில் நான்கு திமுக கவுன்சிலர்கள் தனித்து செயல்பட முடிவு ? உட்கட்சி பிரச்சினையால் மெஜாரிட்டியை இழக்கும் திமுக: மீண்டும் அதிமுகவின் தயவை நாடுமா : அல்லது தங்களது கவுன்சிலர்களை சமாதானப்படுத்துமா:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில், கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது வெற்றி பெற்ற கவுன்சிலர்களில்
திமுக 8, அதிமுக 6, சுயேச்சைகள் 4 என மொத்தம் 18 கவுன்சிலர்கள் இருந்தனர்.
சோழவந்தான் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுக்க 9 கவுன்சிலர்கள் தேவை என்ற நிலையில் அமமுக சார்பில் போட்டியிட்ட 9வது வார்டு கவுன்சிலர் சத்திய பிரகாஷ் மற்றும் சுயேசையாக போட்டியிட்ட 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் ஆகியோரை திமுக ஆதரவு கவுன்சிலராக மாற்றினர்.
இதன் காரணமாக, திமுகவின் ஆதரவு கவுன் சிலர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிட்ட 8 மற்றும் 13 வது வார்டு கவுன்சிலர்கள் மருது பாண்டியன் மற்றும் வள்ளி மயில் ஆகியோர் திமுகவுக்கு ஆதரவளித்த நிலையில், திமுகவின் ஆதரவு கவுன்சிலர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது .
இதன் காரணமாக, பேரூராட்சி தலைவராக ஜெயராமன் துணைத் தலைவராக 18 வது வார்டு திமுக கவுன்சிலர் லதா கண்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.
6 கவுன்சிலர்களை கொண்ட அதிமுகவின் ஆதரவு அப்போது திமுகவுக்கு தேவைப்படாத நிலை இருந்தது.
அதற்கு அடுத்து நடைபெற்ற பணி நியமன குழு உறுப்பினர் தேர்தலில் திமுகவின் கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், அதிமுகவிலிருந்து இரண்டு கவுன்சிலர்கள் திடீரென ஆதரவு அளித்ததால் பணி நியமன குழு உறுப்பினராக 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சோழவந்தான் பேரூராட்சியில் சுமுகமான நிலை இருந்து வந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் நடவடிக்கையால், திமுகவில் உள்ள கவுன்சிலர்கள் மக்கள் நலத்திட்டங்களை செய்ய முடியாமல் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பு திமுக மற்றும் திமுக ஆதரவு கவுன்சிலர்கள் நான்கு பேர் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, சோழவந்தான் பேரூராட்சியில் தனி அணியாக செயல்படுவது என முடிவு செய்யப்பட்டு இதற்கான முறையான கடிதத்தை சோழவந்தான் பேரூர் செயல் அலுவலரிடம் கொடுத்து தனி அணியாக தங்களை செயல்பட அனுமதிக்குமாறு கேட்க முடிவு செய்துள்ளனர்.
தற்போது 12 கவுன்சிலர்கள் திமுகவில் உள்ள நிலையில் நான்கு கவுன்சிலர்கள் தனி அணியாக செயல்படும் பட்சத்தில் சோழவந்தான் பேரூராட்சியில் திமுக தனது மெஜாரிட்டியை இழக்கும் நிலை ஏற்படும் இந்த நிலையில், ஏற்கனவே பணி நியமன குழு தேர்தலில் அதிமுகவின் ஆதரவை பெற்று வெற்றி பெற்றதை போல் மீண்டும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளை தக்க வைக்க அதிமுகவின் தயவை நாடுவார்களா அல்லது அதிருப்தியில் உள்ள திமுக மற்றும் திமுக ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்களை சமாதானப்படுத்த முயற்சிப்பார்களா என ஒரு சில தினங்களில் தெரியவரும். இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் விரைவில் சோழவந்தான் பேரூராட்சியில் பேரூராட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் நடவடிக்கைகளில் திமுக கவுன்சிலர்களே ஈடுபடக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.