மதுரை திருப்பரங்குன்றத்தில் அதிமுக சார்பில் எம். எல். ஏ. ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்ற மனித சங்கிலியில் ஆங்காங்கே சங்கிலியில் இணைப்பில்லாமல் இருந்தது.
வானில் நடந்த சாகசமும் சரி, ரயில் ஜன்னலில் நடைபெற்ற சாகசங்களும், மக்கள் வழி தேடி அலைந்ததும் இந்த அரசு நிர்வாகத்திற்கு பலத்த சம்மட்டி அடி.
மின்சார உயர்வு, சொத்து வரி உயர்வு அதிமுக சார்பாக மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்..,
இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் 2026 வரை எதிரொளிக்கும் கழகத் தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

வான் சாகச நிகழ்வில் ஐந்து பேர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு:
முறையாக திட்டமிட்டு அடிப்படை வசதிகளை திமுக அரசால், சென்னை மாநகராட்சியால் ஏற்படுத்தப்படவில்லை என தெரிகிறது. அதிமுக மாநாடாக இருந்தாலும் எந்த நிகழ்வாக இருந்தாலும் குறைந்தது 2 லட்சம் பேருக்கே 100 கழிவறைகள், 100 தண்ணீர் குடிக்கும் இடங்கள் வைத்திருப்போம். ஆனால் இந்த அரசு முறையான திட்டமிடவில்லை ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து குடிநீர், கழிவறை என தனித்தனியாக ஆட்களை நியமித்து ஒரு குழுவை உருவாக்கி இருந்தால், இந்த பிரச்சனை வந்திருக்காது. மேலும், கூட்டத்தை பேரிகேட் மூலம் பிரித்து அந்த கூட்டத்திற்குள் தனித்தனியாக கழிவரையும், குடிநீரும் அமைத்திருக்க வேண்டும். இந்த அரசுக்கு நிர்வாக திறமை இல்லை. ஆம்புலன்ஸ் செல்வதற்கு முறையாக வழி இல்லாததால் ஐந்து பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இந்த அரசு நிர்வாக திறமையற்ற அரசு என்பதை உலகிற்கு உணர்த்துவதற்கு வானில் நடந்த சாகசமும் சரி, ரயில் ஜன்னலில் நடைபெற்ற சாகசங்களும், மக்கள் வழி தேடி அலைந்ததும் இந்த அரசு நிர்வாகத்திற்கு பலத்த சம்மட்டி அடி.

இதை அரசியல் ஆக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் சொன்னது குறித்த கேள்விக்கு:
மரணத்தை வைத்து அரசியல் செய்தவர்கள் திமுகவினர். இது போன்ற தவறுகள் மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வதற்காக மக்களும், அனைத்து கட்சி தலைவர்களும் சொல்கிறார்கள். இது அரசின் கவனக் குறைவால் நடந்தது. லால் பகதூர் சாஸ்திரி ஒரு ரயில்விபத்து நடந்ததுக்கே ராஜினாமா செய்தார். இன்றுள்ள முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சியில் 65 பேரை கொன்று விட்டு தற்போது ஐந்து பேரை மரணம் அடைய விட்டு இன்னும் ஆட்சியில் தொடர்வதை மக்கள் விரும்பவில்லை எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு:
மதுவிலக்கு கொள்கையை பேசியிருக்கிறார். தற்போது கூட அவர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். திமுக நிவாரணத் தொகை கொடுக்கும் போதே காங்கிரசும் நிவாரணத் தொகை அறிவிக்கிறார்கள் என்றால் திமுகவின் நடவடிக்கை சரியில்லை என்று தானே காங்கிரஸ் சொல்கிறது. ஆதவ் அர்ஜூனும், திருமாவளவனும் கண்டனம் தெரிவிக்கிறார்கள் என்றால் இன்றைக்கு திமுக கூட்டணி குழம்பிப் போயிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி பாலகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். மதிப்பிற்குரிய கனிமொழி அவர்களும் வருத்தத்தை தெரிவித்திருக்கிறார். எனவே இந்த ஆட்சி வீட்டுக்கு செல்ல வேண்டிய ஆட்சி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை எனக் கூறினார்.
