மாற்றுத்திறனாளி சமூகத்தில் மறுமலர்ச்சி மேஜிக் கலையுடன் கன்னியாகுமரி காஷ்மீர் பயணம் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளை சமூகத்துடன் பிணைக்க வேண்டிய முக்கியத்துவத்தை நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பிரபல மேஜிக் நிபுணரும் மோட்டிவேஷன் பேச்சாளருமான கோபிநாத் முதுகாடு நடத்தும். பாரத யாத்ரா இன்குளூசிவ் இந்தியா (இந்தியாவை உள்ளடக்கிய பாரத யாத்திரை) அக்டோபர் ஆறாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கியது.
காலை 7.30 மணிக்கு காந்தி மண்டபத்தின் முன்புறம் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி எம்.எல்.ஏ.யுமான என். தளவாய் சுந்தரம் கொடியசைத்து இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ் தலைமை தாங்கினார்.

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் பயணம் காலை 11.00 மணிக்கு குமாரகோவில் நூருல் இஸ்லாம் உயர் கல்வி மையத்தை சென்றடையும். அங்கு நடைபெறும் யாத்திரை விழிப்புணர்வு நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா ஐ.ஏ.எஸ். தொடங்கி வைப்பார். இதில் முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ .தலைமை வகிக்கிறார்.எஸ்.பி. சுந்தரவதனம் முக்கிய விருந்தினராக கலந்து கொள்கிறார். நூருல் இஸ்லாம் உயர் கல்வி துணை வேந்தர் ஃபைசல் கான் வரவேற்றுப் பேசுகிறார். கோபிநாத் முதுகாடு நன்றி கூறுகிறார்.
2002ல் விஸ்மய பாரத யாத்ரா, 2004ல் காந்தி மந்த்ரா, 2007-ல் விஸ்மய் சுவராஜ் யாத்ரா, 2010ல் மிஷன் இந்தியா என நான்கு யாத்திரைகளை நடத்தியுள்ள கோபிநாத் முதுகாடு 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.
இந்த யாத்திரையில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொள்ளும் வகையில் மத்திய அரசின் பல்வேறு துறைகள் அனுமதி வழங்கி உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மீது சமூகத்திற்கான பார்வையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும், சாதாரண மனிதர்களை போல் இவர்களுக்கும் சம நீதி உறுதி செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகு முறையில் முன்னேற்ற கரமான மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த யாத்திரையில் வலியுறுத்தப்படுகிறது.
மேஜிக் கலையுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் நடத்தும் கலை நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் 40 மேடைகளில் அரங்கேறுகிறது. அக்டோபர் ஆறாம் தேதி அன்று கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பயணம் டிசம்பர் 3-ம் தேதி புதுடில்லியில் நிறைவுபெறும்.

