• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

எளிமையான வாழ்க்கை…

ஒரு மனிதன் அடைவதற்கான மிகவும் கடினமான இலக்கு யாதெனில், எளிமைதான்…!

அந்த எளிமையை உணர்ந்த ஒருவன், வாழ்வில் அனைத்து வெற்றிகளையும் பெறுவான்…

எளிமை என்ற சொல்லுக்கு பல பொருட்களுண்டு.
எளிமைதான் எத்தனை வகை…?

பொருள் எளிமை, நடத்தை எளிமை, செயல்முறை எளிமை, மொழி எளிமை, உணவு எளிமை என்று பலவகை எளிமைகள் இருக்கின்றன…

பொருள் எளிமை

ஒருவர் பெருஞ்செல்வந்தராக இருப்பார். ஆனால்!, தன்னுடைய செல்வப்பகட்டை வெளிப்படுத்தவில்லை என்றால் அவர்தான் எளிமைக்குச் சொந்தக்காரர்…

அவர் சாதாரண தட்டில்தான் சாப்பிடுவார். அவருக்குத் தெரியும், வெள்ளித் தட்டில் சாப்பிட்டாலும், சாதாரணத் தட்டில் சாப்பிட்டாலும் உண்பது உணவைத்தானே தவிர, தட்டையல்ல…!

அவர் உடையிலும் எளிமை தெரியும். பயன்படுத்தும் பொருட்களிலும் எளிமைத் தெரியும்…

நடத்தையில் எளிமை

நடத்தை எளிமை என்பது எவரிடமும் எளிமையாகப் பழகுவது, சாதாரண மனிதராக சமுதாயத்தில் கருதப்படுபவரையும், தன்னுடன் பழக அனுமதி அளிப்பது…

பாகுபாடு இன்றி அனைவரையும் அன்புடன் மரியாதையுடன் நடத்துவது, எப்போதும், எங்கேயும் பொறுமை காட்டுவது…

செயல்முறையில் எளிமை
செயல்முறை எளிமை என்பது தன் அலுவலகத்திலும் மற்றும் எந்தச் செயலிலும் எளிமையைக் கடைபிடிப்பது, செயல்திட்டங்களை எளிமைப்படுத்துவது…

எதையும், எவரும் எளிதாகப் புரிந்துக் கொள்ளக்கூடிய வகையில் தகவல்களைத் தருவது. சட்டங்கள் மற்றும் நியதிகளை எளிமையாக்குவது. எந்தச் செயலைச் செய்தாலும் அவற்றை எளிய முறையில் செய்தல்…

உணவில் எளிமை

உடலும் உள்ளமும் நலம் பெறுவகையிலான எளிய உணவினை உண்ணுதல். நான்கு அங்குல நாவின் சுவை பசிக்காக ஆறடி உடலைப் பாழடிக்காமல் எளிமை உணவு உண்பது…

மொழியில் எளிமை

இறுதியாக, ஆனால்!, மிக முக்கியமாக மொழியில் எளிமை கடைபிடிப்பது…

மொழி எளிமை என்பது, நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகள் அனைத்தும், அனைவருக்கும் குறிப்பாக அந்த தகவல்களைப் பெறுபவர்களில் மிகச் சாதாரண அறிவுடைய மனிதர்களும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எளிமையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது…

எளிமை என்பது ஏழ்மை அல்ல. அற்புதமான வாழ்க்கைக்கு வேர்…!

எளிமையாக வாழ்வதன் மூலம் மாசற்ற இயற்கை, நோயற்ற உடல், நிறைந்த செல்வம், போட்டி – பொறாமையற்ற சமுதாயத்தை உருவாக்கலாம்…!!